சாதனை மேல் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாதனை மேல் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

விசாகபட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று விசாகபட்டினத்தில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 115 ரன்களை எடுத்த இந்திய அணியின் ஓபனர் ரோஹித் ஷர்மா, இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று விசாகபட்டினத்தில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக 59. 1 ஓவர்களே நேற்று வீசப்பட்ட நிலையில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை குவித்துள்ளது.

ஓபனர்களில் ரோஹித் ஷர்மா 115 ரன்களும், மயங்க் அகர்வால் 84 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் நேற்று 4வது முறையாக சதமடித்த ரோஹித் ஷர்மா, அதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

* ஓபனராக இறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை நேற்று ரோஹித் ஷர்மா எட்டினார்.

முன்னதாக ஷிகர் தவான் (ஆஸி. அணிக்கு எதிராக 187 ரன்கள்), கே. எல். ராகுல் (ஆஸி.

அணிக்கு எதிராக 110 ரன்கள்) மற்றும் பிரித்வி ஷா (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 134 ரன்கள்)ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

* ரோஹித் ஷர்மா இந்திய மண்ணில் தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் அரை சதத்தை கடந்து, அதிலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளார்.

இந்திய மைதானங்களில் கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் இவரது ஸ்கோர் வருமாறு: 82 ரன்கள், ஆட்டமிழக்காமல் 51 ரன்கள், ஆட்டமிழக்காமல் 102 ரன்கள், 65 ரன்கள், ஆட்டமிழக்காமல் 50 ரன்கள், தற்போது ஆட்டமிழக்காமல் 115 ரன்கள். இந்திய மைதானங்களில் 6 போட்டிகளில் தொடர்ந்து அரை சதங்கள் என்ற சாதனையை இவருக்கு முன்னதாக எட்டிய ஒரே இந்திய வீரர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.
 
* டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் 4வது சதம் இது.

இந்த சதங்கள் அனைத்துமே இந்திய மைதானங்களில் அடிக்கப்பட்டவை. தவிர தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் முதல் சதமும் இதுதான்.
 
* முதலாவது விக்கெட்டுக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 200க்கும் அதிக ரன்கள் என்பது இது 2வது முறை.

முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஓபனர்கள் வீரேந்திர ஷேவாக்கும், வாசிம் ஜாஃபரும் சேர்ந்து முதலாவது விக்கெட்டுக்கு 213 ரன்களை குவித்தனர். அந்த சாதனையை இன்று ரோஹித்-அகர்வால் ஜோடி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.* சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 98. 22 சராசரி ரன்கள் என்ற டான் பிராட்மேனின் சாதனையையும் நேற்று ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார். கிரிக்கெட் பிதாமகன் என அழைக்கப்படும் டான் பிராட்மேன், சொந்த மண்ணில் 33 போட்டிகளில் 50 இன்னிங்ஸ்கள் ஆடி இந்த சாதனையை படைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா 10 டெஸ்ட் போட்டிகளில், 15 இன்னிங்ஸ்கள் ஆடி இந்த சராசரியை சமன் செய்துள்ளார்.

.

மூலக்கதை