நாடு முழுவதும் கொண்டாட்டம்: காந்தியின் 150வது பிறந்தநாள் விழா: ஜனாதிபதி உட்பட தலைவர்கள் மரியாதை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் கொண்டாட்டம்: காந்தியின் 150வது பிறந்தநாள் விழா: ஜனாதிபதி உட்பட தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவரது சமாதியில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. டெல்லியில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பாஜ செயல் தலைவர் ஜே. பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து குஜராத் சென்ற பிரதமர், அங்கு காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து, நாட்டை திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்றதாக பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

*  முன்னதாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘காந்தியின் 150வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மனித குலத்திற்கு அவர் அளித்த மிகப் பெரிய பங்களிப்பை நாம் நினைவு கூற வேண்டும்.

அவரது கனவை நினைவாக்க கடுமையாக உழைப்பதுடன், சிறப்பான பூமியை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 * குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் அவர் போதித்த உண்மை, அகிம்சை, எளிமை, நல்லிணக்கம் ஆகியவற்றை பின்பற்ற மக்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் சமூக ஒற்றுமை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான பாதையை மகாத்மா காட்டிச்சென்றுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

* மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையில் மலர் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. காந்தி திருஉருவ படத்துக்கு அந்நாட்டின்அதிபர்  மைத்திரிபால சிறிசேன மலர் மாலை சூட்டி மரியாதை செலுத்தினார்.   இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதர்  தரண்ஜித் சிங் சந்து கலந்து கொண்டார்.

இன்று காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், டெல்லி விஜய்காட்டில் உள்ள  முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுவதால், அவரது சமாதியிலும் தலைவர்கள் மரியாதை செலுத்தி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை