மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கம் எதிரொலி: மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்!..நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலால் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கம் எதிரொலி: மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்!..நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலால் அதிர்ச்சி

மும்பை: பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு(பிஎம்சி) வங்கி முடங்கி உள்ள நிலையில், ‘வாடிக்கையாளர்களை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்’ என்று வாடிக்கையாளர் ஒருவர் டுவிட் பதிவிட்டார். அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில் டுவிட்டால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிஎம்சி வங்கி கடந்த 1984ல் மும்பையில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்டிருக்கிறது.

இவ்வங்கி நாட்டின் சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக இருந்தாலும், அந்த வங்கியில் நடந்துள்ள மோசடிகளால், அடுத்த 6 மாதங்களுக்கு இந்த வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

கடந்த 24ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவின்படி, ‘பிஎம்சி வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு அல்லது பிற டெபாசிட் கணக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது’ எனக் கூறப்பட்டது.

அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள பிஎம்சி வங்கியின் தலைமையகத்திலும் பிற கிளைகளிலும் கூடுதலாக பணம் எடுக்க முடியாமல் அவதியுற்றனர். வங்கியின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் ஆர்பிஐ உத்தரவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதன் எதிரொலியாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ‘பிஎம்சி வங்கியின் சேமிப்பு அல்லது பிற டெபாசிட் கணக்குகளிலிருந்து அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம்’ என்று அறிவித்தது. ஆர்பிஐ பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து, பிஎம்சி வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜாய் தாமஸ் கூறுகையில், ‘‘ஆர்பிஐக்கு வழங்கப்பட்ட தகவல்களில் தவறு உள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கியின் மேலாண்மை இயக்குநர் என்ற முறையில் இந்த தவறுகள் 6 மாதங்களில் சரிசெய்யப்பட்டுவிடும். சங்கடமான நேரத்தில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு ஒத்துழைப்பு தர  வேண்டும்’’ என்றார்.மும்பையைத் தலைமையிடமாகக்கொண்ட ஹவுசிங் டெவலப்மென்ட் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்திற்கு சுமார் ரூ. 4,300 கோடி அளவிற்கு பி. எம். சி வங்கிக் கடன் வழங்கி இருப்பதாகவும், அந்தக் கடன் வாராக் கடனாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், பல நிறுவனங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததால், வங்கியின் நிதி நிர்வாகம் நொடிந்துபோனது.

இவ்விவகாரத்தில் பி. எம். சி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜோசப் தாமஸ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ராேகஷ் பட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள மேடம், பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியினால், உங்களிடம் விரைவான தீர்வை எதிர்பார்க்கிறோம்.

நெருக்கடியை கையாள ஏராளமான வழிகள் உள்ளன. இதை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

தயது செய்து இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் மக்கள் விஷத்தை குடித்து இறக்க நேரிடும்’ என்று தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலளிக்கும் வகையிலும், டுவிட் செய்தவரை சமாதானப்படுத்தும் வகையிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் டுவிட் நேற்றிரவு போட்டார். அதில், ‘இதுபோன்ற தீவிரமான விஷயங்களைக் குறிப்பிடவோ, பேசவோ, எழுதவோ கூடாது என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பல மாநில கூட்டுறவு நிறுவனங்கள் வங்கிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவை நிதி அமைச்சகத்தின் கீழ் வராது. ரிசர்வ் வங்கிக்குக்கு அந்த நிறுவனங்கள் கட்டுப்பட்டவை.

ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது’ என்று பதில் அளித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் ‘பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) டெபாசிட் செய்தவர்களுக்காக செய்தி குறிப்பினை pmcbank. com என்ற வலைத்தளத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிய முடியும்.

மேலும் குறைதீர்ப்பு மற்றும் விசாரணைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800223993 ஐ அழைக்கலாம்’ என்று கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாடிக்கையாளரின் கோரிக்கை தொடர்பான டுவிட்டுக்கு, நேரடியாக பதிலளிக்காமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்து டுவிட் பதிவு செய்துள்ளதால், வாடிக்கையாளர் பலரும் டுவிட்டரில் அதிருப்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


.

மூலக்கதை