பாகிஸ்தானில் டி20, ஒருநாள் விளையாட்டு போட்டி: இலங்கை வீரர்களுக்கு ‘ஜனாதிபதி’ பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானில் டி20, ஒருநாள் விளையாட்டு போட்டி: இலங்கை வீரர்களுக்கு ‘ஜனாதிபதி’ பாதுகாப்பு

இஸ்லாமாபாத்: கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணியினர் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் மீதான் நம்பகத்தன்மை முற்றிலும் கேள்விக்குறியானது. பல அணிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தன.

இருப்பினும் காலம் செல்ல செல்ல ஒரு சில அணிகள் அங்கு செல்ல சம்மதம் தெரிவித்தன. இதற்கிடையே, கடந்த 27ம் தேதி தொடங்கி, வரும் 9ம் ேததி வரை இலங்கை அணி பாகிஸ்தானில் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஆனால், பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடுகளால் இலங்கை அணியின் மூத்த வீரர்கள் மலிங்கா, ஏஞ்சலா மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள், அந்நாட்டில் விளையாட மறுத்துவிட்டனர். இளம் வீரர்கள் கொண்ட அணியே, தற்போது அந்நாட்டுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், கராச்சியில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 46. 5 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, இலங்கை வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து, விளையாட்டு மைதானம் வரை, ஒரு ஜனாதிபதிக்கு அளிக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து ஏற்பாடுகளும் அந்நாட்டின் ராணுவத்தால் வழிநடத்தப்பட்டன.

சுமார் 2,000 பாதுகாப்பு வீரர்கள் ஓட்டல் மற்றும் மைதானத்தில் எச்சரிக்கையுடன் பணி அமர்த்தப்பட்டனர்.

.

மூலக்கதை