பணம் சம்பாதிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...நிர்வாண பார்ட்டிக்கு போஸ்டர்: கோவாவில் வாலிபர் அதிரடி கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பணம் சம்பாதிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...நிர்வாண பார்ட்டிக்கு போஸ்டர்: கோவாவில் வாலிபர் அதிரடி கைது

பனாஜி: பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, நிர்வாண பார்ட்டி நடத்துவதாக கூறி போஸ்டர் ஒட்டிய வாலிபரை போலீசார் கோவாவில் கைது செய்தனர். கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் இதில் 10-15 வெளிநாட்டு பெண்களும் பத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த போஸ்டரில், எங்கு எப்போது பார்ட்டி நடக்க உள்ளது என்பது குறித்த விவரம் இடம்பெறவில்லை. இந்த பார்ட்டி போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இவ்விவகாரம் தொடர்பாக கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரதிமா கோட்டின்ஹோ, அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந், சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் ஆகியோர், இதுபோன்ற நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உஷாரான போலீசார், ‘கோவாவில் எந்த நிர்வாண பார்ட்டியையும் அனுமதிக்க மாட்டோம்’ என்று தெரிவித்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின், நிர்வாண போஸ்டர் ஒட்டிய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: கல்லூரி படிப்பை பாதியிலேயே முடித்துவிட்டேன்.

பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம் என்று யோசித்தேன். அதற்காக இணையதளத்தில் இருந்து சில ஆபாச புகைப்படங்களை எடுத்து போஸ்டரை தயாரித்து, நகர்பகுதியில் ஒட்டினேன்.

நிர்வாண பார்ட்டியை பார்க்க விரும்புவோரிடம் முன்பணம் பெற முடிவு செய்திருந்தேன். அதன் மூலம் சபலம் கொண்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பணத்தை சுருட்டிவிட திட்டமிட்டேன்.

ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே போன் அழைப்புகள் வந்தன. வெளிநாட்டில் இருந்தும் அழைப்புகள் வந்தது.

இத்தனை அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருகட்டத்தில் எனக்குள் பயம் அதிகமானதால், போனை சுவிட்ஜ் ஆப் செய்துவிட்டேன்.

சில நாட்கள் கழித்து போனின் சுவிட்ஜ் ஆன் செய்தேன். அதன்பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை