ஜம்மு - காஷ்மீர் குறித்து சர்ச்சை பதிவு: முதலில் உங்கள் நாட்டு பிரச்னையை தீர்க்க பாருங்க... பாக். வீரர் அப்ரிடிக்கு தவான் பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜம்மு  காஷ்மீர் குறித்து சர்ச்சை பதிவு: முதலில் உங்கள் நாட்டு பிரச்னையை தீர்க்க பாருங்க... பாக். வீரர் அப்ரிடிக்கு தவான் பதிலடி

மும்பை: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இது வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவை கடுமையாக விமர்சித்து ஐ. நாவில் பேசினார். பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்களும் அவ்வப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் கவலைக்கிடமான சூழல் இருக்கிறது. அப்பாவிகள் சுடப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள்; சுதந்திரம், சுயநிர்ணய உரிமை குறித்து பேசும் குரல்கள் நசுக்கப்படுகின்றன.



ஐ. நா. சபை எங்கே இருக்கிறது இதை ஏன் நிறுத்தவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு இந்திய வீரர் ஷிகர் தவான் பதிலடி கொடுத்து இந்தியில் ட்விட் செய்துள்ளார். அதில், ‘யாரேனும் எங்கள் நாட்டைப் பற்றிப்பேசினால், நாங்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நிற்போம். வெளியில் இருந்து யாரும் எங்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை.

முதலில் உங்கள் நாட்டில் உள்ள பிரச்னையை கவனித்து தீர்க்கப் பாருங்கள். அதன்பின் மற்ற நாடுகளின் பிரச்னையில் தலையிடுங்கள்.

கண்ணாடி வீட்டுக்குள் இருப்பவர்கள், ஒருபோதும் கல் எறியக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல ஏற்கனவே உலகக் கோப்பைப் போட்டியின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து அப்ரிடி கருத்துத் தெரிவித்திருந்தார்.

அப்போது அப்ரிடிக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான், தற்போதும் கருத்து தெரிவித்து இருப்பது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை