மேலும் 4 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்க திட்டம்: மத்திய அரசு முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேலும் 4 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்க திட்டம்: மத்திய அரசு முடிவு

வேலூர்: தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் 535 மருத்துவக் கல்லூரிகளில் 79,500 எம்பிபிஎஸ் இடங்களும், 28,295 எம். டி, எம். எஸ்.

இடங்களும் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் எண்ணிக்கை உள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது.

அதில், மருத்துவர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாதது கண்டறியப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி, எம்எஸ் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து வரும் 5 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கையை 1 லட்சமாகவும், எம்டி, எம்எஸ் இடங்களின் எண்ணிக்கையை 60 ஆயிரமாகவும் உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாட்டில் பொறியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பொறியியல் படிப்பில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகளவில் தொடங்கப்பட்டன.

தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையையும் கவனத்தில் கொண்டு கூடுதல் எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுடெல்லியில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நாடு முழுவதும் 31 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்காக இந்திய மருத்துவ நிர்வாக கவுன்சிலில் உள்ள குழுவினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.

இதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர், ஹந்த்வாரா ஆகிய இடங்களிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார், பரன், பன்சாவாரா, சுத்தூர்கர், ஜெய்சல்மார், காரவ்லி, நாகவுர், ஸ்ரீகங்காநகர், சிரோஹி, பண்டி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டிஹட், கவுசாம்பி மற்றும் மத்தியபிரதேச மாநிலம் பால்காட், மாண்டியா, மான்ட்சவுர், ராஜ்கர், ஷொஹ்பூர், மஹேஷ்வர், சத்தார்பூர், சிங்க்ரவுலி ஆகிய இடங்கலும், தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.

.

மூலக்கதை