ஐக்கிய நாட்டு பொதுசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐக்கிய நாட்டு பொதுசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி

நியூயார்க்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஐ. நா சபையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, இந்திய வெளியுறவு பெண் அதிகாரி, ‘உலகிலேயே தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாகிஸ்தான்தான்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐ. நா சபையின் 74ம் ஆண்டு பொதுச் சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

அதில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, வளர்ச்சி, பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: நான் இங்கு பருவநிலை மாற்றம் குறித்தே பேச துவங்குகிறேன்.

எனக்கு முன் பேசிய தலைவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து பேசினர். ஆனால், அதில் தீவிரத்தன்மை இல்லை என்பதை உணர்கிறேன்.

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. நான் ஆட்சிக்கு வந்தவுடன் இதுவரை 10 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.

பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள 100 கோடி மரக் கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் நண்பர்கள் உள்ளனர்.

இந்தியா செல்வது எனக்கு பிடிக்கும்.

ஆட்சிக்கு வந்தவுடன் இரு நாடுகளிடையேயான பிரச்னை, வர்த்தகம் குறித்து பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இந்தியாவிடம் தெரிவித்தேன்.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார்.   இந்திய ராணுவம் மீது 20 வயது காஷ்மீர் இளைஞன் தாக்குதல் நடத்தினார். இதற்கு எங்கள் மீது இந்தியா குற்றம்சாட்டியது.

தாக்குதலுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று இந்தியாவிடம் கேட்டோம். ஆனால், இதற்கு மாறாக தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானை விட  7 மடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் நேரடி போர் ஏற்பட்டால், நாங்கள் சரணடைய வேண்டும் அல்லது சுதந்திரத்திற்காக சாகும் வரை போரிட வேண்டும். ஒருவேளை அணு ஆயுதம் ஏந்திய ஒரு நாடு சாகும் வரை போராட வேண்டுமென நினைத்தால், அது எல்லை கடந்து உலக அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ. நா சபைதான் காஷ்மீர் மக்கள் அவர்களது உரிமையை அவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என உத்தரவாதம் அளித்தது.

ஆனால், கடந்த ஆக்.

5ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், அங்கு 9 லட்சம் ராணுவ வீரர்களை இந்தியா குவித்துள்ளது. மக்கள் வீட்டுச்சிறையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ. நா-வில் பாகிஸ்தாவ் பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு, இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா ஐ. நா அவையில் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமரின் அணுசக்தி மிரட்டல் தலைமை பண்பிற்கு சரியானதல்ல. ஐ. நா சபையால் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட அல் குவைதா, தெய்சி போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு உலகிலேயே பென்ஷன் தரும் ஒரே அரசு பாகிஸ்தான்தான் என்பதை அந்நாடு ஒப்புக் கொள்ளுமா? உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் காப்பாற்றி விட்டதாக காட்டிக் கொள்வதற்காக, பாகிஸ்தானில் எந்த தீவிரவாத அமைப்பும் செயல்படவில்லை என்பதை சரி பார்த்துக் கொள்ள ஐ. நா கண்காளிப்பாளர்களை தற்போது பாக்.

பிரதமர் இம்ரான் கான் அழைத்துள்ளார்.

ஐ. நா சபையால் தடை செய்யப்பட்ட 130 தீவிரவாதிகள், ஐ. நா கருப்பு பட்டியலில் உள்ள 25 தீவிரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இல்லை என்பதை பாகிஸ்தான் பிரதமரால் உறுதியாக சொல்ல முடியுமா? வரலாறு பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம். கிரிக்கெட் வீரராக இருந்து பிரதமரானவரின் இன்றைய பேச்சு, முரட்டுதனமான துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக எல்லை மீறியதாக உள்ளது.
தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் நிதி நடவடிக்கை குழு பாகிஸ்தானால் மறுக்க முடியுமா? நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக பேசியதை இம்ரான் கானால் மறுக்க முடியுமா? கட்டாய மதமாற்றம் போன்றவற்றால் 1947ல் 23 சதவீதமாக இருந்த பாகிஸ்தான் சிறுபான்மையினர் எண்ணிக்கை தற்போது 3 சதவீதமாக சுருங்கிவிட்டது.

இந்தியாவின் ஜனநாயகம், காஷ்மீர், லடாக் விவகாரம் ஆகியவற்றில் நடுநிலைத்தன்மை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தீவிரவாத கொள்கைகளை தொழிலாக கொண்டு செயல்படும் எவரும் இந்திய மக்களுக்காக பேச தேவையில்லை.   இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை