ஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்றிரவு நாடு திரும்புகிறார் மோடி: டெல்லி விமான நிலையத்தில் பாஜ விழா ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்றிரவு நாடு திரும்புகிறார் மோடி: டெல்லி விமான நிலையத்தில் பாஜ விழா ஏற்பாடு

புதுடெல்லி: ஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்றிரவு டெல்லி திரும்புகிறார். அவரை வரவேற்க டெல்லி பாஜவினர், விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி ஒரு வாரம் அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 20ம் தேதி சென்றார். ஹோஸ்டனில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி, எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டம், நியூயார்க்கில் நடந்த 74வது ஐ. நா பொதுச்சபை கூட்டம், பருநிலை மாற்றம் குறித்த மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ஐ. நா சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா  திரும்புவதற்கு முன்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு  நடத்தினார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை மோடி சந்தித்தபோது,  தீவிரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என இருதலைவர்களும் உறுதி ஏற்றுக்  கொண்டனர்.

இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும்  வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். வங்கதேசத்தின் தந்தையென  அழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்க ஹசீனா அழைப்பு விடுக்க, அதனை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண்  துளசி கப்பார்ட்டுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ெதாடர்ந்து அமெரிக்காவில்  பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இந்திய  நேரப்படி அதிகாலை 2 மணியளவில் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டார்.



விமான  நிலையத்தில் பிரதமரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். ஜெர்மனியின்  பிராங்க்பர்ட் வழியாக இன்று இரவு பிரதமர் டெல்லி வந்து சேருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பாஜ துணைத் தலைவர் அபய் வர்மா தலைமையில், 50,000 பேரைத் திரட்டி பெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். விமான நிலையத்திலிருந்து 2-3 கி. மீ தூரம் வரை பிரதமர் மோடியை வரவேற்க, பாரம்பரிய உடையணிந்த இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபரில், 2018ம் ஆண்டுக்கான தென்கொரியாவின் உயரிய விருதான சியோல் அமைதி பரிசு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பின், அவர் நாடு திரும்பிய போது டெல்லியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைவிட, இன்றிரவு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று, பாஜ எம்பி விஜய் கோயல் தெரிவித்தார்.



மோடி ஜனாதிபதியா?
ஐ. நா பொதுச்சபை கூட்டத்தில் ேபசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியப் பிரதமர் மோடியை ‘இந்திய ஜனாதிபதி மோடி’  என்று குறிப்பிட்டார். இந்தியாவை பற்றியே தனது பேச்சில் அதிகம் பேசிய இம்ரான் கான், அவர் பேச அனுமதிக்கப்பட்ட 15-20 நிமிடங்களை தாண்டி 50 நிமிடங்கள் வரை நீண்ட நேரம் பேசினார்.

இம்ரான்கான், பொது மேடைகளில் தவறாக பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே,  இந்தாண்டு துவக்கத்தில் ஈரான் சென்ற போது, ‘ஜெர்மனியும் பிரான்சும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன’ என்று கூறுவதற்கு பதிலாக ‘ஜெர்மனியும் ஜப்பானும்’ என்று பேசியது சர்வதேச அளவில் நகைப்புக்குள்ளானது.

தற்போது, இந்திய பிரதமர் மோடியை, ‘இந்திய ஜனாதிபதி’ என்று பேசியதால், சமூக வலைதளங்களில் இம்ரான்கானை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.


.

மூலக்கதை