டி20 கிரிக்கெட் தரவரிசை: 11வது இடத்தில் கோஹ்லி 13வது இடத்தில் தவான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டி20 கிரிக்கெட் தரவரிசை: 11வது இடத்தில் கோஹ்லி 13வது இடத்தில் தவான்

துபாய்: டி20 கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசியின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ஓபனர் ஷிகர் தவான் ஆகியோர் முறையே 11வது மற்றும் 13வது இடத்தை பிடித்துள்ளனர். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் முடிவடைந்தது.

இதில் தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. மொகாலியில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணியும், பெங்களூருவில் நடந்த 3வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன.

எனவே இத்தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தவிர வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.

மேலும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயும் முத்தரப்பு டி20 தொடர் நடந்தது. இத்தொடர்களின் அடிப்படையில் ஐசிசி நேற்று சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மொகாலியில் நடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 72 ரன்களை குவித்த விராட் கோஹ்லி அதன் மூலம் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி, தற்போது 659 புள்ளிகளுடன் 11வது இடத்தை பிடித்துள்ளார்.

மொகாலி மற்றும் பெங்களூருவில் முறையே 40 மற்றும் 36 ரன்களை குவித்த இந்திய அணியின் ஓபனர் ஷிகர் தவான், இதன் மூலம் 4 இடங்கள் முன்னேறி 639 புள்ளிகளுடன் 13ம் இடத்தை பிடித்துள்ளார்.

இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் குவின்டன் டிகாக், அதன் மூலம் இந்த பட்டியலில் 49வது இடத்தில் இருந்து 30வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஹசரத்துல்லா சசாய், 727 புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்து, அந்த இடத்தை எட்டிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதே போல் டி20 ஐசிசி தரவரிசையில் முதன் முதலில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து வீரர் என்ற பெருமையை\ ஜார்ஜ் முன்சே (600 புள்ளிகள், 21வது இடம்) தட்டிச் சென்றுள்ளார்.   இவர் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 56 பந்துகளில் 127 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் (896 புள்ளிகள்), 2ம் இடத்தில் ஆஸி.

வீரர் கிளென் மேக்ஸ்வெல் (815 புள்ளிகள்) உள்ளனர். முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

9ம் இடத்தில் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவும் (664 புள்ளிகள்), 10வது இடத்தில் இந்திய வீரர் லோகேஷ் ராகுலும் (662 புள்ளிகள்) உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸி.

வீரர் பேட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா மற்றும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

.

மூலக்கதை