விளையாட்டு காட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
விளையாட்டு காட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

சென்னை: தங்கம் விலை இன்று திடீரென சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 28,776 க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் ஸ்திரமற்ற நிலை காரணமாகவும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்திலும், பங்குச்சந்தைகளிலும் மாறி மாறி முதலீடு செய்து வருகின்றனர்.

இதற்கேற்ப தங்கம் விலை சர்வதேச சந்தையில் மாறுபடுகிறது. இதன் எதிரொலியாக உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை மாற்றம் கண்டு வருகிறது.

ஐ. நாவில் நேற்று முன்தினம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் நியாயமற்ற வணிக கொள்கைகளுக்கு எதிராக போரடி வருகிறேன். இனி வர்த்தக மோசடிகளை பொறுத்துக்கொள்ள முடியாது.

ஹாங்காங் விவகாரத்தில் சீனாவை கவனமாக கண்காணிப்போம் என கூறியிருந்தார். இதனால் வர்த்தக பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்ற சந்தேகமும் பதற்றமும் முதலீட்டாளர்களிடையே மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் (31. 103 கிராம்) 1540 டாலர் வரை சென்றது. அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன.

அதோடு, டிரம்ப் தனது அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு நபரின் உதவியை நாடியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து டிரம்ப் மீது விசாரணை தொடங்கியுள்ளதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று மாலை வர்த்தக முடிவில் சவரனுக்கு ரூ. 224 உயர்ந்து சவரன் ரூ. 29136க்கு விற்கப்பட்டது. அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சவரன் 29000 ரூபாயை தாண்டியது.

ஆனால் இன்று காலையில் தங்கம் கிராமுக்கு ரூ. 45ம், சவரனுக்கு ரூ. 360ம் குறைந்தது. இதனால் சவரன், ரூ. 28,776க்கு விற்பனையானது.

அக்டோபர் முதல் வாரத்தில் சீனா- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கம் விலையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் காணப்படும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை 27 டாலர் வரை சரிந்தது.

லாபம் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றதும், டாலர் மதிப்பு வலுவடைந்ததும் இதற்கு காரணம். சீனாவுடன் கடந்த 15 மாதங்களுக்கு மேல் நீடித்து வந்த வர்த்தக போர் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிவித்ததால் தங்கத்தின் மீதான முதலீடு சற்று மந்தமானது.

அதோடு, உலக அளவில் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனாவில் தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தேவை குறைந்ததும் விலை சரிவுக்கு மற்றொரு காரணம்.

இருப்பினும் டிரம்ப் மீதான விசாரணையால் சர்வதேச பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்து வருவதால் திடீர் ஏற்ற இறக்கங்கள் தொடரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை