ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்: அமெரிக்காவால் 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்தோம்...இம்ரான் கானின் ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்: அமெரிக்காவால் 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்தோம்...இம்ரான் கானின் ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு

நியூயார்க்: ஆப்கான் போரில் அமெரிக்காவுக்கு உதவியதால், 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்ததாக, பாக். பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கி இந்தியாவிற்கு எதிராக உலக நாடுகளை திருப்ப பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் உதவியைப் பெற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

ஆனால், அமெரிக்க நிர்வாகம் இந்தியா பக்கம்தான் உள்ளது என்பதை உலகிற்கு எடுத்துரைப்பதுபோல் நேற்று முன்தினம் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி அமைந்தது.

இந்நிலையில் ஐ. நா.

பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க அதிபர் டிரம்பை நேற்று சந்தித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்கிற தனது கோரிக்கையை டிரம்பிடம், இம்ரான்கான் மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதனைத் திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், ‘காஷ்மீர் நீண்ட காலம் நீடிக்கும் ஒரு சிக்கலான பிரச்னை; இந்தியாவின் சம்மதம் இன்றி இந்த விஷயத்தில் தலையிடமாட்டேன்’ என்று இம்ரான்கானிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடைேய, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெளியுறவு கவுன்சில் கூட்டத்தில் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக போராட பாகிஸ்தானின் ராணுவ மற்றும் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியன, அல்-கொய்தா மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்தது.

அவர்களுடன் எப்போதும் உறவு வைத்திருக்கிறது. ஒசாமா பின்லேடன் அபோட்டாபாத்தில் தங்கியிருப்பது குறித்து பாகிஸ்தானால் ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டதா? என்று கேட்கப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம் தரப்பில், ஐ. எஸ். ஐ. - அல்கொய்தா போன்ற தீவிரவாத குழுக்களுக்கு  ஆப்கானிஸ்தானில் போராட பயிற்சி அளித்தது.

தீவிரவாத குழுக்களுடன் பாகிஸ்தானுக்கு எப்போதும் தொடர்பு இருந்தது.

நாங்கள் இந்த குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்திய போது, எல்லோரும் எங்களுடன் உடன்படவில்லை.

ராணுவத்தில் உள்ளவர்கள் கூட எங்களுடன் உடன்படவில்லை. எனவேதான் பாகிஸ்தானுக்குள் தாக்குதல்கள் நடந்தன.

பின்லேடன் அபோட்டாபாத்தில் வசிக்கிறார் என்பது பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரியாது. இந்த தகவலை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளனர்.

எனக்குத் தெரிந்தவரை, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ. எஸ். ஐ. அமைப்புக்கு அபோட்டாபாத் பற்றி எதுவும் தெரியாது.



அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மெட்டிஸ், பாகிஸ்தானை மிகவும் ஆபத்தான நாடு என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ஏன் தீவிரமயமாக்கப்பட்டது என்பது குறித்து ஜேம்ஸ் மெட்டிஸுக்கு முழுமையாக தெரியாது என்றே நான் நினைக்கிறேன்.

9/11 சம்பவத்துக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் சேர்ந்ததன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இதனால், 70,000 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.

இது, பாகிஸ்தானின் மிகப்பெரிய தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா கைகோர்த்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘ஆப்கான் போரில் அமெரிக்காவுக்கு உதவியது மிகப்பெரிய தவறு’ என்று பேசி தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததை ஒப்புக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை