ஹூஸ்டனில் இருந்து இன்று காலை நியூயார்க் விரைவு: இன்றிரவு ஐ.நா-வில் மோடி உரை... நேற்றிரவு ‘கோபேக்’ கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹூஸ்டனில் இருந்து இன்று காலை நியூயார்க் விரைவு: இன்றிரவு ஐ.நாவில் மோடி உரை... நேற்றிரவு ‘கோபேக்’ கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்

நியூயார்க்: ஹூஸ்டன் நகரில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இன்று காலை நியூயார்க் நகருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். இந்திய நேரப்படி இன்றிரவு ஐ. நா தலைமையகத்தில் மோடி உரையாற்ற உள்ளார்.

நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியின் போது, ‘கோபேக் மோடி’ என்ற கோஷத்துடன் பலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவிற்கு ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்றிரவு டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பிரதமர் மோடியுடன், ஒரே மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு, இரு தலைவர்களும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர். பிரதமர் மோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டன் என்ஆர்ஜி கால்பந்து மைதானத்திற்குள் பல ஆயிரம் மக்கள் கூடியிருந்த போதும், மைதானத்திற்கு வெளியே நூற்றுக் கணக்கானோர் மோடி - டிரம்ப் நிகழ்ச்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள், காஷ்மீரிகள், முஸ்லிம்கள் மட்டுமின்றி, வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் கருப்பு அமெரிக்கர்களும் இருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பாசிசம், நாசிசம், இனப்படுகொலை, சிறுபான்மையினர் மீது தாக்குதல், கோபேக் மோடி’ போன்ற பதாகைகளை ஏந்தியவாறு டிரம்ப் - மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.

கூட்ட அரங்கில் இருந்தவர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள் என்றால், வெளியில் இருந்தவர்கள் மோடிக்கும், பாஜ அரசுக்கும் எதிராக கோஷமிட்டனர். பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வேலிக்குள் நின்று சாலையோரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்ேபாது அவர்கள், ‘எங்களுடைய போராட்டம் இந்துக்களுக்கு எதிரானது அல்ல.

இந்துத்துவா கொள்கைக்கு எதிரானது’ என்றும் கூறினர். மேலும், காஷ்மீரில் மோடி அரசு நடத்தும் அராஜகங்களை கண்டிப்பதாக தெரிவித்தனர்.

டிவிட்டரில், ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, அது டிரண்டிங் ஆனது.

இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி நியூயார்க் நகருக்கு இந்திய நேரப்படி இன்று காலை 8. 30 மணியளவில் சென்றடைந்தார்.

அமெரிக்க பயணத்தின் இரண்டாவது கட்டத்தில் நியூயார்க்கிற்கு வந்த பிரதமர் மோடியை, தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர், இன்று இரவு 7. 30 மணியளவில் (இந்திய நேரப்படி) ஐ. நா தலைமையகத்தில் நடைபெறும் காலநிலை நடவடிக்கையின் 74வது உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார்.

அப்போது, யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் குறித்த உயர்மட்டக் கூட்டத்திலும் உரையாற்றுவார். தொடர்ந்து நாளை (செப்.

24) இந்தியா - பசிபிக் தீவுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஐ. நா தலைமையகம் மற்றும் காந்தி அமைதி தோட்டத்தில், பிறபகலில் காந்தி சூரிய பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

அதன்பின், ஐ. நாவில் மகாத்மா காந்தியை நினைவுகூரும் 150வது ஆண்டு விழாவில், ‘தலைமைத்துவ விஷயங்கள்;

தற்காலிக காலங்களில் காந்தியின் தொடர்பு’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அப்ேபாது, ‘குளோபல் கோல்கீப்பர்ஸ் விருது’ மோடிக்கு வழங்கப்படுகிறது.

நாளை மறுநாள் (செப். 25) பிரதமர் மோடி ப்ளூம்பெர்க் வர்த்தக மன்றத்தின் பேசுகிறார்.

40க்கும் மேற்பட்ட வர்த்த நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். செப்.

26ல் பிரதமர் மோடி பலதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, செப். 27ல் ஐ. நா சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திவிட்டு, நாடு திரும்புகிறார்.இளவரசர் விமானத்தில் இம்ரான்கான்
அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நேற்றிரவு பிரதமர் மோடி உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்குச் சென்றார்.

அங்கிருந்து தனியார் விமானம் மூலம் இம்ரான் கான் அமெரிக்காவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், ‘இம்ரான் கானிடம் நீங்கள் எங்களுடைய சிறப்பு விருந்தினர்; நீங்கள் தனியார் நிறுவன விமானத்தில் செல்லக்கூடாது.

எனது சொந்த விமானத்தில் செல்லுங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளார். அதையடுத்து, முகமது பின் சல்மானின் விமானத்தில் இம்ரான்கான் அமெரிக்கா வந்தடைந்தார்.

அவர், இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைச் சந்திக்கவுள்ளார்.

அதன்பின், ஐ. நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேசவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

.

மூலக்கதை