மோடி நிகழ்ச்சி:50ஆயிரம் பேர் திரண்டனர்

தினமலர்  தினமலர்
மோடி நிகழ்ச்சி:50ஆயிரம் பேர் திரண்டனர்

ஹூஸ்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கவுள்ள ஹவ்டி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்கர்கள், இந்தியர்கள் என 50 ஆயிரம் பேர் திரண்டனர்.
இந்திய பிரதமர் மோடி பங்கேற்கும் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்று, 30 நிமிடங்கள் உரையாற்ற உள்ளார். போப்பை தவிர, அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்கா வரும் வெளிநாட்டு தலைவர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.


இதற்கு முக்கிய காரணம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் தான். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பதற்ற நிலை ஒருபுறம் இருந்து வந்தாலும், இந்தியர்கள் - அமெரிக்கர்கள் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் இந்த வாய்ப்பை தனது தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார் டிரம்ப்.

டெக்சாஸ் மாகாணத்தை பொறுத்தவரை, டாப் 10 மெட்ரோபொலிடன் நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் அதிகம் வாழும் இரண்டு நகரங்கள் ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ். இதற்கு முன் மோடி அமெரிக்கா சென்ற போது நியூயார்க், சான் ஜோஸ், வாஷிங்டன் நகரங்களிலேயே அவரது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் டிரம்ப் கலந்து கொள்வதற்காகவே இந்திய -அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் ஹூஸ்டன் நகரம் இம்முறை மோடியின் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2016 ம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட தேசிய ஆசியர்கள் - அமெரிக்கர்கள் ஆய்வின்படி, ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தான் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டுமானால், இந்தியர்களின் ஓட்டுக்கள் முக்கியம்.
கடந்த முறை அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு 77 சதவீதம் இந்தியர்கள் ஓட்டளித்துள்ளனர். ஆனால் டிரம்பிற்கு வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.

மூலக்கதை