அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் உற்சாக வரவேற்பு: மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

தினகரன்  தினகரன்
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் உற்சாக வரவேற்பு: மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

ஹூஸ்டன்: அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா - ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ஈரான் ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக, ஹூஸ்டன் நகரில், சீக்கிய அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மத்திய அரசு எடுத்துள்ள பல முடிவுகளுக்காக பாராட்டு தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில், 1984 ல் நடந்த சீக்கியர் படுகொலை குறித்த விவகாரம், டில்லி விமான நிலையத்திற்கு, குருநானக் தேவ் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டுதல், இந்திய அரசியல் சாசனத்தில் 25வது பிரிவு, விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன.இது தொடர்பாக சீக்கிய அமைப்பை சேர்ந்த அர்விந்தர் சாவ்லா கூறுகையில், பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், சீக்கியர்களுக்காக மத்திய அரசு செய்த பணிகளுக்காக நன்றி தெரிவித்து கொண்டோம். கர்தார்பூர் வழிதடத்திற்காக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தோம். ஹவுடி மோடி கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது, பிரதமர் மோடி எவ்வளவு முக்கியமான தலைவர் என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதனை தொடர்ந்து தாவூதி போரா அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு ம.பி.,யின் இந்தூரில், அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்த காஷ்மீர் பண்டிட்கள், இந்தியா வளர்ச்சிக்கும், இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு 7 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினர்.

மூலக்கதை