பொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா?

தினமலர்  தினமலர்
பொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா?

இந்த அரசு, இரண்டாம் முறையாக பதவிக்கு வந்தவுடன் கூறியது, 2025ல் இந்தியாவை, '5 டிரில்லியன் டாலர் எகானமி'யாக கொண்டுவருவோம் என்பது தான். அப்படி, 5 டிரில்லியன் டாலர் எகானமியாக வரவேண்டுமென்றால் ஒவ்வொரு காலாண்டும் பொருளாதார வளர்ச்சி, 9 சதவீதம் இருக்க வேண்டும்.

அப்போதுதான், 2021ம் ஆண்டு 3.3 டிரில்லியன் டாலர், 2022ம் ஆண்டு 3.6 டிரில்லியன் டாலர், 2023ம் ஆண்டு 4.1 டிரில்லியன் டாலர், 2024ம் ஆண்டு 4.5 டிரில்லியன் டாலர், 2025ம் ஆண்டு 5 டிரில்லியன் டாலராக வளர்ச்சி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.சொன்ன அடுத்த காலாண்டிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில், 5 சதவிகிதமாக வீழ்ந்துள்ளது. கடந்த, 2016ம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் 9.2 சதவீதத்தை எட்டிய பொருளாதார வளர்ச்சி மற்றும் தொடர்ந்து 8 சதவீதம் என்ற ஜோரான குதிரையில் போய்க் கொண்டிருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்திருக்கிறது என்ற செய்தி நாட்டை உலுக்கியிருக்கிறது. சாமானிய மக்களிலிருந்து, பொருளாதார நிபுணர் வரை தெருமுனையிலிருந்து, மேடைகள் வரை இதே பேச்சு. எந்த அளவு இந்தியாவை இது பாதித்திருக்கிறது, எப்படி மீளும் என்று பார்ப்போம்.

முக்கியமான எட்டு துறைகள்



இந்தியாவின் முக்கியமான எட்டு துறைகள் ஜூலை மாதத்தில், 2.1 சதவீதம் வளர்ச்சியையே பெற்றிருக்கின்றன. இது கடந்தாண்டு 7.3 சதவீதமாக இருந்திருக்கிறது. 'அன்எம்ப்ளாய்மென்ட்' (வேலையில்லாதவர் சதவீதம்) இந்திய அளவில் 8.2 சதவீதமாகவும், நகர்புறத்தில் 9. 4 சதவீதமாகவும் இருக்கிறது.

மந்த நிலைக்கு காரணம் என்ன?



குறைந்து வரும் நுகர்வோர் உபயோகம் ஒரு காரணமாக உள்ளது. பழைய பொருட்களை சரி செய்து வைத்து கொள்வதை விட, புதிதாக விலைக்கு வாங்குவதையே ஒரு பகுதியினர் விரும்புவர். தற்போது இருக்கும் பொருளாதார மந்த நிலையில், வரும் குறும்செய்திகளை வைத்து அவர்களும் கையை கட்டிக் கொண்டு இருக்க விரும்புகின்றனர். இதனால் பழையன கழிவது, புதியன புகுவது (வாங்குவது) பெருமளவில் குறைந்துள்ளது.

பங்குச் சந்தையின் படுகொலை





பொதுவாக பங்குச் சந்தை நல்ல சுபிட்சமாக இருக்கும் பட்சத்தில் குறிப்பாக வட இந்தியாவில் வாங்கும் சக்தி மக்களுக்கு அதிகமாக இருக்கும். ஜூலை மாத பட்ஜெட்டில் போடப்பட்ட ஒன்றிரண்டு கட்டுப்பாடுகள் (வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டளர்களுக்கு போடப்பட்ட கூடுதல் வரி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் போன்றவை) பங்குச் சந்தையை இது தான் சமயம் என்று உலுக்கின. பட்ஜெட் அன்று 40,000 புள்ளிகளை தொட்ட மும்பை பங்குச் சந்தையும் இறங்கு, இறங்கு என இறங்கிக்கொண்டே சென்றது. தற்போது பல ஆயிரம் புள்ளிகளை இழந்து நிற்கிறது.ஜூலை 5ம் தேதி பட்ஜெட்டுக்கு பிறகு வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் 25,000 கோடி ரூபாய்களுக்கு மேல் எடுத்து சென்றிருக்கிறார்கள். இது தான் பங்குச் சந்தையின் படுகொலைக்கு காரணம். இதனால் அங்கு நஷ்டப்பட்டவர்களும் வாங்குவதை ஒத்தி வைத்துள்ளனர், செலவுகளை குறைத்துள்ளனர்.

பறிபோகும் வேலை வாய்ப்புகள்



வேலை வாய்ப்புகள் பறி போகும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது. சமீப காலத்தில் ஜெட் ஏர்வேஸ் (சுமார் 20,000 பேர் வேலையிழப்பு) ஆரம்பித்து வைத்த இந்த நிலை தற்போது பல தொழில்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. ஆட்டோமொபைல்ஸ் துறையில் மட்டும் 3.70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமானபார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று கூறுகிறது. இது போல பல கம்பெனிகள் இருக்கின்றன. மேலும் நடுத்தர, சிறிய மற்றும் குறுந்தொழில் கம்பெனிகளில் (MSME) உற்பத்தி இழப்பால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கம்பெனிகளில் வேலைக்கு போகும் மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. குறைந்து வரும் தொழில் முதலீடுகளும் ஒரு காரணம். தொழில்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களும் தங்களுடைய செயல்களை ஒத்தி வைத்துள்ளனர்.

இறக்குமதி குறைவு



இந்தியாவின் இரண்டு பிரதான இறக்குமதி பொருட்கள் கச்சா எண்ணெய், தங்கம். வாகன உற்பத்தி, விற்பனை குறைவு, கம்பெனிகளில் பெட்ரோல் உபயோகம் குறைவது ஆகியவைகளால் கச்சா எண்ணெய் உபயோகம் சிறிது குறைந்துள்ளது. தங்கம் விலை உலகளவில் கூடி வருவதால் அதன் விற்பனையும் குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் இறக்குமதியும் குறைந்து வருகிறது.மொத்தமாக இறக்குமதி ஆகஸ்ட் மாதம் சென்ற ஆண்டு இதே மாதத்தை விட 13.45 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 45.73 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் 39.58 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.இறக்குமதி குறைகிறது என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பெட்ரோல், டீசல் உபயோகம் குறைவது, அதுவும் தொழிற்சாலைகளில் குறைவது சிறிது கவலையளிக்க கூடியதுதான்.

கார் விற்பனை





இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள துறை. மூன்று கோடியே 70 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தியாவின் ஜி.டி.பி.யில் இந்தத் துறையின் பங்களிப்பு 12 சதவீதம். இவ்வளவு முக்கியமான துறையில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர், விற்பனை குறைந்து வருகின்றன. மொத்தமாக கூறப்போனால் ஆட்டோமொபைல் துறை, “ரிவர்ஸ் கியரில்” போய்க்கொண்டிருக்கிறது.கார் விற்பனை குறைவு தற்போது ஒரு பெரிய விஷயமாகி இருக்கிறது. கார் விற்பனை கூடுதல் இந்திய பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒரு இண்டிகேட்டரா? ஒவ்வொரு காலாண்டும் வரும் கார் விற்பனை தகவல்கள் கூடுதலாகவே இருந்ததால் நாம் அதை ஒரு இண்டிகேட்டராகவே பார்க்க ஆரம்பித்து விட்டோம் என்பது தான் உண்மை.

நாட்டில், 1980களில் ஆடம்பர பொருளாக இருந்த கார், அதன் பிறகு ஒரு அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. பலருக்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகியிருந்தது. சிலர் இரண்டு கார் வைத்துக் கொள்ள விரும்பினர். அடிக்கடி கார்களை மாற்றினர். மாருதி வந்த பிறகு கார்களும் மக்கள் வாங்கக் கூடிய விலைக்கும் கிடைத்தது. இதனால் விற்பனைகள் கூடின. புதிய கார் உற்பத்தி கம்பெனிகள் வந்தன. விற்பனைகள் எப்போதும், எந்த ஆண்டும் கூடும் என்ற எண்ணத்தில் கம்பெனிகளின் உற்பத்திகள் கூட்டப்பட்டன, விற்பனை இலக்குகள் கூட்டப்பட்டன. ஏதாவது ஒரு வருடம் விற்பனை குறைந்தாலும் அது பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. அது தான் தற்போது நடந்திருக்கிறது. கார், பைக் வாங்க கடன்கள் மலிவான வட்டிக்கு கிடைத்தன. இதற்கெனவே பல வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பெரிய அளவில் வந்தன. வங்கிகளும் பெருமளவில் கடன்கள் கொடுத்தன.

இந்த துறையில் ஸ்லோ டவுண் ஏன்?



* என்.பி.எப்.சி., கடன் தருவது முழுவதுமாக அடைக்கப்பட்டு விட்டது. அவர்களிடம் கடன் கொடுக்க பணமில்லை.
* பி எஸ் 6, எலக்டிரிக் கார்கள் வந்த பின் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கார்கள் வாங்கும் எண்ணத்தை தள்ளிப் போட்டது.
* பெட்ரோல் விலை பெருமளவில் கூடிக் கொண்டே சென்றது.
* காரை வாங்கி மெயின்டெய்ன் செய்வதை விட வாடகை கார்களில் பயணிப்பது சுலபமாகவும், செலவு குறைவாகவும் இருந்தது.
* விற்பனைகள் ஆண்டுக்கு ஆண்டு கூடும் என்ற எண்ணத்தில் கம்பெனிகள் தங்களது உற்பத்தி கெபாசிட்டிகளை கூட்டி வைத்திருந்தது.இவைகள்தாம் கார்கள் விற்பனையில் மந்த நிலைக்கு காரணங்கள்.

மற்ற நாடுகளில் ஸ்லோ டவுன் (மந்த நிலை) எப்படி இருக்கிறது?

'ஸ்லோ டவுன்' என்பது ஒரு வியாதி. ஒரு நாட்டில் ஆரம்பித்தால் அது விரைவாக அடுத்தடுத்த நாடுகளுக்கும் வேகமாக பரவும். இதனால் பல நாடுகள் ஸ்லோ டவுனில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன.அந்த வகையில் பார்த்தால் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, அர்ஜெண்டினா, இத்தாலி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில், மெக்சிகோ, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், துபாய் ஆகிய நாடுகளிலும் ஸ்லோ டவுன் ஆட்டுவிக்கிறது. எனவே இதை இந்தியாவின் தனிப்பட்ட பிரச்னையாக பார்க்க தேவையில்லை.

பரவும் செய்திகள்



வாட்ஸ் அப் வந்தவுடன் தகவல் பரிமாற்றம் எல்லா மொழிகளிலும் காற்றை விட வேகமாகஇருக்கிறது. சரியான செய்திகளும் இருக்கின்றன, பொய் செய்திகளும் இருக்கின்றன. இது தான் மக்களின் பீதிக்கு ஒரு முக்கியமான காரணம். பொருளாதார மந்த நிலையை பற்றி கூறும் போது, 'நாடு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது, செலவழிக்காதீர்கள்-' என்ற அளவிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.இதனால் பணமிருக்கும் மக்கள் கூட செலவழிக்க தயங்குகின்றனர். இதனால் பொருட்கள் விற்பனை குறைந்திருக்கிறது. உற்பத்தி சரக்குகளில் தேக்கம் இருக்கிறது.

நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்கள் பொருளாதார மந்த நிலையை குறைக்க உதவியிருக்கிறதா?

பட்ஜெட்டுக்கு பிறகு பல பிரஸ் மீட்-கள் நடந்துள்ளன. பல அறிவிப்புகள் வந்துள்ளன. குறிப்பிடத்தக்கவை என்று கூறப்போனால் பட்ஜெட்டில் போடப்பட்ட வரிகள் குறைப்பு அல்லது ரத்து, பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு, சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு, ஏற்றுமதியை ஊக்கப்படுத்த சலுகைகள், வீட்டுக்கடனுக்கான சலுகைகள் ஆகியவை சந்தைகளை சிறிது ஊக்கப்படுத்தின. இவைகள் இன்னும் உறபத்திகளை, உபயோகங்களையும் கூட்ட வேண்டும்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., தாக்கம்



பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. தாக்கத்திலிருந்து இந்தியா இன்னும் முழுமையாக விடுபெறவில்லை. இதுவும் மந்த நிலைக்கு ஒரு காரணம். ஜி.எஸ்.டி. என்பதை இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் அமல்படுத்துவது என்பது ஒரு பெரிய சவால். இதனாலேயே அதை பல முந்தைய அரசாங்கங்கள் இதை கையில் எடுத்துக் கொள்ளவே இல்லை. பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. கூடுதலாக இருக்கிறது என்ற பலர் கவலை தெரிவித்தபடியே தான் இருக்கிறார்கள். அவற்றில் தேவையானவற்றை அறிந்து ஜி.எஸ்.டி., கவுன்சில் மூலமாக குறைக்க முயற்சிகள் முழுமையாக எடுக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் ஜி.எஸ்.டி., வருவாயை குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அரசாங்கம் நாட்டின் பொருளாதார மந்த நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும். அது போல பணமதிப்பிழப்பு ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும் அமல்படுத்திய விதத்தில் பல தடுமாற்றங்கள் இருந்ததால், அதிலும் திட்டத்தின் பலன் பாதை தடுமாறி விட்டது.

என்ன நடக்கும்?





பொருளாதார வளர்ச்சிக்கு நான்கு முக்கிய காரணிகள் இருக்கின்றன. ஒன்று உள்நாட்டு நுகர்வோர் உபயோகம், ஏற்றுமதி, தனியார் முதலீடுகள், அரசாங்க செலவுகள். இவை நான்கும் தற்போது மந்த நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர கார்ப்பரேட் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி, வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரிப்பு ஆகியவையும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. நடப்பு, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது சிறிது மந்தமாகவே இருக்கும். பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்தை 2020ம் ஆண்டு முடிவில் எட்டும் சாத்திய கூறுகள் அதிகம் இருக்கின்றன.

பொருளாதார சக்கரம்



நம்மில் பெரும்பாலானோர், 'இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது' என்று நினைக்கிறோம். ஆனால் அரசாங்கத்தின் எண்ணம் வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது உலகளவில் உள்ள பொருளாதார நிலையை வைத்து பார்க்கும் போது, இந்தியாவின் பொருளாதார மந்த நிலை கட்டுக்குள் தான் இருக்கிறது என்று கூறுகிறது.ஐ.எம்.எப்., எனப்படும் 'இன்டர்நேஷனல் மானிடரி பண்ட்' என்ன சொல்கிறது தெரியுமா? இந்தாண்டு உலகளவில் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக மட்டுமே இருக்கும், இது கடந்த, 2009ம் வருடத்தில் இருந்து பார்க்கும் போது குறைந்த பட்ச அளவு ஆகும் என்று கூறுகிறது.

உலகளவிலே இப்படி இருக்கும் போது இந்தியாவின் வளர்ச்சி குறைவை ஏன் இவ்வளவு பெரிது படுத்த வேண்டும் அரசாங்கம் கூறுகிறது.பொருளாதாரம் என்பது சக்கரம் போன்றது. எப்போதும் சுழன்று கொண்டு தான் இருக்கும். வளர்ச்சியில் எப்போதும் கூடுதல் எதிர்பார்ப்பது தவறு. வளர்ச்சி சதவீதத்தில் பின்னடைவு இருக்கலாம். இதனால் பொருளாதார வளர்ச்சியில் தடைகள் இருக்கலாம். இது எந்த ஒரு நாட்டிற்கும் பொதுவானது.

என்ன செய்யலாம்?



அரசாங்கம் செலவினங்களை கூட்ட வேண்டும், அமெரிக்க - சீனா வர்த்தக போரை இந்தியாவிற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் பொருட்களை ஏற்றுமதியை அதிகரிக்க வழி செய்ய வேண்டும், கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.மற்ற அறிவிக்கப்பட்ட சலுகைகளுடனும், மேலும் அறிவிக்க போக இருக்கிற சலுகைகளும் சேர்ந்து இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். ஐந்து டிரில்லியன் டாலர் எகானமியை, 2025ம் வருடம் எட்டுவது என்பது சிறிது கடினமான முயற்சி தான். ஆனால் 2027க்குள் எட்டும் வாய்ப்புகள் இருக்கின்றன.இந்திய இளைஞர் சமுதாயம், உலகளவில் இருப்பதால் பொருளாதார மந்த நிலையை கடப்பது மற்ற நாடுகளை விட சிறிது எளிதான காரியம் தான். கடப்பதற்கு காலம் தேவை, மக்களிடையே பொறுமை தேவை, கட்டுப்பாடுகள் தேவை. தற்போதைய பொருளாதார மந்த நிலை கவலைக்குரியது தான். இந்தியா இதை விட கடினமான சூழ்நிலைகளை 1992, 2008ம் ஆண்டுகளில் சந்தித்திருக்கிறது. அவைகளையும் கடந்து வந்திருக்கிறது. இதுவும் கடந்து போகும்.

வெள்ளிக்கிழமை 'விசேஷம்'



வெள்ளிக்கிழமை வந்தால் நாம் ஒவ்வொருவருக்கும் சனி, ஞாயிறு விடுமுறை பற்றியே நினைப்பு இருக்கும். சமீப காலமாக வெள்ளிக் கிழமை வந்தால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன அறிவிப்புகள் வெளியிடப்போகிறார் என்று தான் அனைவரும் காத்திருக்கின்றனர். அந்த அளவு அறிவிப்புகள் வெளியாகின்றன.அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமையும் என்ன அறிவிப்பு வரப்போகிறது என்று ஆவலுடன் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அன்றைய தின அறிவிப்புகள் தீபாவளியின் லட்சுமி வெடிக்கு இணையானது. இந்தியாவிற்கு தீபாவளி முன்னதாகவே வந்து விட்டது என்றே கூறலாம். தற்போது இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில் சலுகைகளை அவர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பின்படி வருகிற அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, தயாரிப்புத் துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15 சதவிகிதம் மட்டுமே விதிக்கப்படும்.இதுவரை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரி, 30 சதவிகிதத்திலிருந்து, 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகள் ஜூலை 5க்கு முன் 'பை-பேக்' அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் அந்த கம்பெனிகளுக்கு 'பை-பேக்' வரிகள் இல்லை.வெளிநாட்டு 'போர்ட்போலியோ' முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் போடப்பட்டிருந்த மூலதன ஆதாயத்திற்கு கூடுதல் சர்சார்ஜ் விலக்கப்பட்டு விட்டது.'ஜி.எஸ்.டி.,' கவுன்சில் கூட்டத்துக்கு முன்பே இந்த கார்ப்பரேட் வரி சலுகை அளிக்கப்பட்டுவிட்டது. இதனால் எதிர்பார்த்தபடி ஜி.எஸ்.டி., குறைப்பு அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்கின்றனர். இந்த அறிவிப்புகளை சந்தைகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றன என்ற கூறலாம். வெள்ளியன்று மும்பை பங்கு சந்தை, 2000 புள்ளிகளுக்கு மேல் சென்று கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் மேலே சென்றது.



- சேதுராமன் சாத்தப்பன் -

மூலக்கதை