பிரதமருக்கு குவியும் பாராட்டு

தினமலர்  தினமலர்
பிரதமருக்கு குவியும் பாராட்டு

ஹூஸ்டன்: அமெரிக்காவில் பிரதமர் மோடியின் எளிமையை கண்டு நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

7 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் சென்றடைந்தார். இன்று, ஹூஸ்டனில் நடக்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப்புடன் சேர்ந்து கலந்து கொள்கிறார். தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

இந்நிலையில் ஹூஸ்டன் நகர் வந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமெரிக்க வர்த்தகம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை இயக்குனர் கிறிஸ்டோபர் ஒல்சன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஸ்வர்தன் சிறிங்களா ஆகியோர், மோடியை கைகுலுக்கி வரவேற்றனர். தொடர்ந்து மோடியிடம் , பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்து கொடுத்தார். அதில் இருந்த சில மலர்கள் கீழே விழுந்தன. உடனடியாக, மோடி, கீழே குனிந்து . பூக்களை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சமூக வலைதளவாசி ஒருவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து கீழே விழுந்த பூவையோ அல்லது மலரின் தண்டையோ , பிரதமர் மோடி எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது, அவரது எளிமையை காட்டுகிறது எனக்கூறியுள்ளார்.


மற்றொருவர், மோடிக்கு வாழ்த்துகள். கீழே விழுந்த பூக்களை கவனித்து, அதனை எடுத்து கொடுத்தார். இது, சிறிய விஷயத்திலும் அவர் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. பெரிய தலைவரின் எளிமை இது என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர்,செடியின் ஒரு பகுதியான பூவை காலால் நசுக்கி விட கூடாது என்ற நம்பிக்கையிலா? அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா? எனக்கூறியுள்ளார்.

மூலக்கதை