7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி: முதற்கட்டமாக 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்து

தினகரன்  தினகரன்
7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி: முதற்கட்டமாக 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்து

ஹூஸ்டன்: ஹூஸ்டனில் நடந்த அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு செயலர் விஜய் கோக்லேயும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா - ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ஈரான் ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடி தன் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான 20 பில்லியன் அமெரிக்க டாலர் வரிவிதிப்பு குறைப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இந்த வரிகுறைப்பு மூலம் அமெரிக்க நிறுவனங்களின் கவனத்தை இந்தியா ஈர்க்கும் என நம்பப்படுகிறது. இதற்கிடையே, இன்று டெக்சாஸில் நடைபெறும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரை ஆற்றுகிறார். இந்த  நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து, 23ம் தேதி, ஐநா பொதுச்சபை கூட்டத்தில், பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து இந்தியாவின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்  விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். ஐநா பொதுச்சபையில் இந்திய தலைவர் ஒருவர் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை. ஐநா சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஐநா சபை கட்டிடத்தின் மேற்கூரையில் சூரியஒளி மின் தகடுகள் அமைக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின், 25ம் தேதி உலக தொழில் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். அதன்பின், 27ம் தேதி ஐநா சபை பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். தொடர்ச்சியாக 27-ம் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

மூலக்கதை