மூன்று நாட்களில் இரண்டு முறை பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு

தினமலர்  தினமலர்
மூன்று நாட்களில் இரண்டு முறை பிரதமர் மோடி  டிரம்ப் சந்திப்பு

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, தன் அமெரிக்க பயணத்தின்போது, மூன்று நாட்களில் இரண்டு முறை, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை சந்திக்கிறார்.


ஐ.நா., பொது சபை கூட்டம் உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, மூன்று நாட்களில் இரண்டு முறை, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை அவர் சந்திக்கிறார்.


முக்கிய அறிவிப்பு


இன்று, ஹூஸ்டனில் நடக்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, மோடி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், டிரம்பும் பங்கேற்கிறார்; இதில், அவர், முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள், இருவரும் மீண்டும் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து, ஆலோசனை நடத்த உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கானும், அமெரிக்கா செல்கிறார். நாளை அவர், டிரம்பை சந்தித்து பேச உள்ளார். நாளை மறுநாள், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வரும் உலகத் தலைவர்களுக்கு, டிரம்ப் விருந்தளிக்கிறார்.


ஆனால், அன்றைய தினம், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சியில், மோடி பங்கேற்கிறார். அதனால், விருந்தில் அவர் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், இம்ரான் கான் இந்த விருந்தில் பங்கேற்கிறார்.

அமெரிக்கா மறுப்பு


'பிரதமர் மோடியைப் போலவே, இம்ரான் கானையும், டிரம்ப் இரண்டு முறை சந்திக்கிறார்' என, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதை, அமெரிக்க அதிபர் மாளிகை மறுத்துள்ளது. 'இம்ரான் கானை, டிரம்ப் ஒரு முறை தான் சந்திக்கிறார்' என, அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. ஹூஸ்டனுக்கு செல்லும் வழியில், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில், மோடியின் விமானம் நேற்று நிறுத்தப்பட்டது.


தொழில்நுட்ப காரணங்களுக்காக, அங்கு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இரண்டு மணி நேரத்துக்கு பின், விமானம் புறப்பட்டது.

மூலக்கதை