இஸ்ரேலில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு,..பிரதமர் பதவி கேட்கிறார் பென்னி கன்ட்ஸ்

தினகரன்  தினகரன்
இஸ்ரேலில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு,..பிரதமர் பதவி கேட்கிறார் பென்னி கன்ட்ஸ்

ஜெருசலேம்: இஸ்ரேலில் 3வது தேர்தலை தவிர்க்க கூட்டணி ஆட்சி அமைத்தால், அதிக இடங்களில் வென்ற தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என பென்னி கன்ட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமனற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சி  அமைக்க பிரதமர் நெதன்யாகு மறுத்ததால், இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று வரை 97 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பென்னி கன்ட்ஸின் ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களை பிடித்தது. பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களில் வென்றது. 120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பிரதமர் நெதன்யாகு அளித்த பேட்டியில், ‘‘எங்கள் கட்சி தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லாததால், கூட்டணி ஆட்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்த பென்னி கன்ட்ஸ்க்கு அழைப்பு விடுக்கிறேன். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக நாம் எந்நேரமும் சந்தித்து பேசலாம். நாம் 3வது முறையாக தேர்தலை சந்திக்க முடியாது. அதை நான் எதிர்க்கிறேன். இது கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நேரம்’’ என்றார். இதையடுத்து பென்னி கன்ட்ஸ் அளித்த பேட்டியில், ‘‘கூட்டணி ஆட்சியை எனது தலைமையில் அமைக்க விரும்புகிறேன். இஸ்ரேல் மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்புகின்றனர். கூட்டணி ஆட்சி அமைக்க, அரசியல் கொள்கையுடன் ஒருவர் வர முடியாது. நெதன்யாகு பொறுப்புடனும், அக்கறையுடனும் வர வேண்டும். அதற்கு ஏற்ப நான் செயல்படுவேன்’’ என்றார்.

மூலக்கதை