சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன்களை வரும் மார்ச் வரை வராக்கடனாக அறிவிக்க கூடாது: வங்கிகளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன்களை வரும் மார்ச் வரை வராக்கடனாக அறிவிக்க கூடாது: வங்கிகளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை வராக்கடன்களாக அறிவிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை வங்கிகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். மேலும் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை வரும் 2020ம் ஆண்டு மார்ச் 31 வரை வராக்கடன்களாக அறிவிக்க கூடாது. இதன் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் உதவ முடியும். மேலும் பொதுத்துறை வங்கிகள், வங்கி சாரா அமைப்புகள் மற்றும் சிறு கடன்பெறுவோருடன் ஆலோசனையில் ஈடுபட வேண்டும். நாடு முழுவதும் சுமார் 400 மாவட்டங்களில் வரும் 24ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இரண்டாவது கட்ட கூட்டங்கள் அக்டோபர் 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடத்தப்படவேண்டும். பொதுவாக கடன்பெறுவது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி அடுத்த மாதம் வருகிறது. அப்போது நடத்தப்படும் கூட்டத்தில் சிறு வியாபாரிகள் விவசாயிகள் சிறுகுறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் மற்றும் கட்டுமானதுறையினருக்கு கடன் வழங்கவேண்டும் என்றார்.

மூலக்கதை