வாத்ரா நிலத்திற்கான உரிமம் ரத்து செய்தது அரசு

தினமலர்  தினமலர்
வாத்ரா நிலத்திற்கான உரிமம் ரத்து செய்தது அரசு

சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவால் வாங்கப் பட்டு, பின், டி.எல்.எப்., நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட, 3.5 ஏக்கர் நிலத்துக்கு வழங்கப்பட்ட, வீட்டுமனை உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறையை, அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலம் அருகே உள்ள குர்கானில், காங்., தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான, ராபர்ட் வாத்ரா, 2008ல், 3.5 ஏக்கர் நிலத்தை, 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.இந்த நிலம், இவருக்கு சொந்தமான, 'ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி' என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டது.

இந்த இடத்தை, வீட்டு மனைகளாக விற்பனை செய்ய, ஹரியானா மாநில, நகர்ப்புற திட்டமிடல் துறை, அனுமதி அளித்தது. அனுமதி கிடைத்த இரண்டு மாதத்தில், அந்த நிலத்தை, டி.எல்.எப்., என்ற கட்டுமான நிறுவனத்துக்கு, 58 கோடி ரூபாய்க்கு, ராப்ர்ட் வாத்ரா விற்பனை செய்தார். வாத்ரா - டி.எல்.எப்., இடையே நடந்த இந்த நில பேரத்தை, அப்போதைய பதிவுத் துறை இயக்குனராக பதவி வகித்து வந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா, 2012ல் ரத்து செய்தார்.

இந்நிலையில், வாத்ரா வாங்கிய, 3.5 ஏக்கர் நிலத்தை, வீட்டு மனைகளாக விற்பனை செய்ய, வழங்கப்பட்ட உரிமத்தை, ரத்து செய்யும் நடைமுறையை, அம்மாநில அரசு துவக்கி உள்ளதாக, நகர்ப்புற திட்டமிடல் துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை