ஐ.நா., சபையில், 27ல் பிரதமர் மோடி பேச்சு

தினமலர்  தினமலர்
ஐ.நா., சபையில், 27ல் பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி:ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில், 27ம் தேதி, பிரதமர், நரேந்திர மோடி பேசுகிறார் என, வெளியுறவு செயலர், விஜய் கோகலே தெரிவித்தார்.

'ஹவ்டி மோடி'



டில்லியில், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:ஐ.நா., சபையின், 74ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24ம் தேதி முதல், 30 வரை நடக்கிறது.இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு, நாளை புறப்பட்டு செல்கிறார். 22ம் தேதி, ஹூஸ்டனில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள, 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பும் பங்கேற்கிறார்.இதன்பின், பிரதமர், மோடி நியூயார்க் செல்கிறார். 24ம் தேதி, ஐ.நா.,வில், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், சிங்கப்பூர், நியூசிலாந்து, வங்கதேசம், ஜமைக்கா உட்பட பல நாடுகளின் பிரதமர்களும், ஐ.நா., பொதுச் செயலரும் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், ஐ.நா., தலைமையகத்தின் மேல்தளத்தில், 'காந்தி சூரியமின்சக்தி பூங்கா' நிறுவுவது உட்பட, மூன்று திட்டங்கள் துவக்கப்பட உள்ளது.

விருது



பில் கேட்சின், 'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ்' அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும், 'குளோபல் கோல்கீப்பர்ஸ' விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு, இந்த விருதுக்கு, பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'துாய்மை இந்தியா' திட்டத்தை செயல்படுத்தியதற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.வரும், 27ல், ஐ.நா., பொது சபை கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகிறார். 2014ம் ஆண்டுக்கு பின், இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேச உள்ளார்.

இந்தக் கூட்டத்தின் இடையில், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து, இரு தரப்பு பேச்சு நடத்துகிறார்.அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவை மேம்படுத்துவது பற்றியும், வர்த்தக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும், டிரம்பிடம், மோடி பேசுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.

'ஓட்டலில், 'டிப்ஸ்' கொடுப்பது பிடிக்கும்'



''ஓட்டலில் சாப்பிட்டபின், ஊழியர்களுக்கு, 'டிப்ஸ்' கொடுப்பது எனக்குப் பிடிக்கும்; அதற்காகவே என் பாக்கெட்டில் பணம் எடுத்துச் செல்வேன்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். வாஷிங்டனில் அவர் கூறியதாவது:நான், 'கிரெடிட் கார்டு' பயன்படுத்துவதை, பல ஆண்டுகளுக்கு முன்பேயே நிறுத்திவிட்டேன். அதனால், நான், 'பர்ஸ்' எடுத்துச் செல்வதில்லை. ஆனால், என்னுடைய பின் பாக்கெட்டில், எப்போதும் பணம் வைத்திருப்பேன்.

ஓட்டலில் சாப்பிடும் போது, ஊழியர்களுக்கு, டிப்ஸ் கொடுப்பது எனக்கு பிடிக்கும். அதற்காக பணம் வைத்துள்ளேன். ஹூஸ்டனில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இவ்வாறு, டிரம்ப் கூறினார்.ஹூஸ்டன் கூட்டத்தில், 'இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுமா' என, நிருபர்கள் கேட்டதற்கு, 'பொறுத்திருந்து பாருங்கள்' என, டிரம்ப் தெரிவித்தார்.

மூலக்கதை