சிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3!

தினமலர்  தினமலர்
சிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3!

புதுடில்லி:'ஐ.என்.எக்ஸ்., மீடியா' ஊழல் வழக்கில், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரத்துக்கான நீதிமன்றக் காவல், அக்., 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையில், நாற்காலி, தலையணை ஆகிய வசதிகள் தரப்படவில்லை என்றும், அதனால், முதுகுவலி ஏற்பட்டுள்ளதாகவும், சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெறுவதற்கு, 2007ல் அனுமதி வழங்கப்பட்டது.

திஹார் சிறை



விதிமுறைகளை மீறி, எப்.ஐ.பி.பி., எனப்படும் அன்னிய நேரடி முதலீட்டு வாரியம், இந்த அனுமதியை அளித்ததாக புகார் எழுந்தது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம் தொடர்ந்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, ஊழல் வழக்கில், சிதம்பரத்தை, டில்லியில் உள்ள அவருடைய வீட்டில், ஆக., 21ல், சி.பி.ஐ., கைது செய்தது.அவரை, சி.பி.ஐ., காவலில் எடுத்து, விசாரித்தது. காவல் முடிந்து, செப்., 5ல் அவர், நீதிமன்றக் காவலில், டில்லியில் உள்ள, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றக் காவல் முடிந்ததைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சிதம்பரம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய காவலை, அக்., 3ம் தேதி வரை நீட்டித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார்.

முதுகு வலி



விசாரணையின்போது, சிதம்பரத்தின் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:சிதம்பரத்துக்கு, 74 வயதாகிறது. உயர் ரத்தக் கொதிப்பு உள்பட பல்வேறு நோய்கள் உள்ளன. திகார் சிறையில், சிதம்பரத்துக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும், அவருடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவும் வழங்கப்பட வேண்டும்.

அவருடைய அறையில், நாற்காலி, தலையணை போன்ற வசதிகள் தரப்படவில்லை. படுக்கையிலேயே உட்கார வேண்டிய நிலை உள்ளதால், அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவருடைய உடல் எடையும் குறைந்துள்ளது.அவர் அடைக்க பட்டு உள்ள சிறைக்கு வெளியே, சிறை அதிகாரிகள், கைதிகள் அமர்வதற்கு நாற்காலி போடப்பட்டு இருந்தன. தற்போது, அதையும் அப்புறப்படுத்தியுள்ளனர். அவருக்கு, நாற்காலி, தலையணை வசதிகள் தரப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்."

எந்தக் கைதியாக இருந்தாலும், அவர்களுடைய உடல்நிலைக்கு முக்கியத்துவம் தருவோம். சிறை விதிகளின்படி, சிதம்பரத்துக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சை வழங்குவது குறித்து, சிறை நிர்வாகம் முடிவு செய்யும்," என, சொலிசிட்டார் ஜெனரல், துஷார் மேத்தா கூறினார்.அதைத் தொடர்ந்து, சிதம்பரத்துக்கு உரிய மருத்துவப் பரிசோதனை செய்ய, சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு நாற்காலி மற்றும் தலையணை அளிப்பது குறித்தும் உரிய முடிவெடுக்கும்படி, சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று, நீதிமன்ற வளாகத்தில், அவருடைய குடும்பத்தாரை சந்திக்கவும், நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமின் கிடைக்குமா?சிதம்பரத்துக்கு ஜாமின் கேட்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான, விசாரணை, வரும், 23ல் நடக்க உள்ளது.

மூலக்கதை