50:50 பங்கீடு இல்லையெனில் தனித்து போட்டி

தினமலர்  தினமலர்
50:50 பங்கீடு இல்லையெனில் தனித்து போட்டி

'மொத்த இடங்களில், பாதிக்குப் பாதி என பங்கிட்டுக் கொண்டால், கூட்டணி உண்டு; இல்லையெனில், அவரவர் வழியை பார்த்துக் கொள்ளலாம்' என, சிவசேனா, பா.ஜ.,வை பகிரங்கமாகவே எச்சரித்துள்ளதால், தேசிய அரசியல் களத்தில் பரபரப்பு கூடியுள்ளது.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது; இன்னும் சில தினங்களில், தேர்தல்ஆணையம், தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது.இம்மாநிலத்தில், காங்கிரஸ் --- தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், ஆளும் கூட்டணியான, பா.ஜ., - -சிவசேனா இடையே இழுபறி நிலவுகிறது.சிவசேனா கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தர, பா.ஜ., ஒப்புக்கொள்ள வில்லை. இதனால், பல சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும், தோல்வியில் முடிந்துவிட்டன.

இனி, பா.ஜ., இறங்கி வராது என உணர்ந்துள்ள சிவசேனா, தனித்துப்போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் தேர்வை துவங்கி விட்டது.இந்நிலையில், நேற்றுமுன்தினம், மஹாராஷ்டிரா அரசில் இடம்பெற்றுள்ள, சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர், திவாகர் ரவோத், 'பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படும் அதே அளவு தொகுதிகளை, சிவசேனாவுக்கு தரவில்லை எனில், இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி முறியும்' என, அதிரடியாக கூறியிருந்தார்.

இவரது கருத்தால், பரபரப்பு கூடியுள்ள நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், நேற்று அளித்த பேட்டி, கொதிநிலையை அதிகரித்து உள்ளது.நிருபர்களிடம் பேசிய அவர், ''50:50 'பார்முலா'வை, பா.ஜ., மதிக்க வேண்டும். ''காரணம், இது, பா.ஜ., தலைவர் அமித் ஷா, மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் உருவான ஒன்று.

உண்மை இவ்வாறு இருக்கும்போது, திவாகர்ரவோத்தின் கருத்தில், எந்த தவறும் இல்லை,'' என்றார்.உத்தவ் தாக்கரேயின் மனச்சாட்சி என வர்ணிக்கப்படுபவர், சஞ்சய் ராவத். எனவே, பாதிக்குப் பாதி இடங்களை தரவில்லை எனில், அவரவர் வழியைப் பார்த்துக் கொள்ளலாம் என, சிவசேனா பாய்ச்சல் காட்டியுள்ளது, தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை