ரூ.10 கோடி! விருதையில் செராமிக் பொம்மைகள் உற்பத்தி...விலை சரிவால் உற்பத்தியாளர்கள் கவலை

தினமலர்  தினமலர்
ரூ.10 கோடி! விருதையில் செராமிக் பொம்மைகள் உற்பத்தி...விலை சரிவால் உற்பத்தியாளர்கள் கவலை

விருத்தாசலம்:நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் 10 கோடி ரூபாய்க்கு பீங்கான் பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

விலை சரிவடைந்ததால், உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.விருத்தாசலம்- உளுந்துார்பேட்டை சாலையில், 1965ல், காமராஜர் ஆட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில், செராமிக் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகள், பியூஸ் கேரியர் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மேலும், இந்தோனேஷியா போன்ற வெளி நாடுகளில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு, களிமண் வட்டுகள் தயாரித்து, அனுப்பி வைக்கப்படுகின்றன. எடை குறைவான களிமண் வட்டுகளை மேல்நோக்கி வீசி, அதனை குறிபார்த்து சுடும் பயிற்சி தரப்படுகிறது. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.இங்கு தீபாவளி, கார்த்திகை, நவராத்திரி மற்றும் தசரா போன்ற பண்டிகை நாட்களில் அகல் விளக்குகள் உற்பத்தி அதிகமாக இருக்கும். ரூ.2 கோடிக்கும் அதிகமான அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படும்.
ரூ.10 கோடிக்கு உற்பத்தி
நவராத்திரி பண்டிகை, கோவில்கள், வீடுகளில் கொளு வைத்து சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காாக, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில், இந்தாண்டு அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் 29ம் தேதி நவராத்திரி விழா ஆரம்பம் ஆகும் நிலையில், 400க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் இருந்து, 10 கோடி ரூபாய்க்கு பீங்கான் பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.விநாயகர், பெருமாள், லட்சுமி, பூவராகவர், காமாட்சி, மாரியம்மன், மீனாட்சி, சிவன், ரங்கநாதர், வண்டி குபேரன், சாய்பாபா, லட்சுமி நரசிம்மர், கல்யாண செட், தசாவதாரம் மற்றும் விலங்குகள் உட்பட நாற்றுக்கணக்கான பொம்மைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்தாண்டு புதிய வரவாக எகிப்து நாட்டின் மன்னர்கள், அவர்கள் சார்ந்த பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
உற்பத்தியாளர்கள் கவலை
உற்பத்தி அதிகரித்த நிலையில், விலை சரிவால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், 70 பைசாவுக்கு விற்பனையான அகல் விளக்கு, தற்போது 55 பைசாவுக்கு விற்பனையாகிறது. இதே போல் மற்ற அனைத்து பொருட்களின் விலையும் சரிந்துள்ளது.
இது குறித்து செராமிக் கம்பெனி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'தற்போது, 400க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் நவராத்திரி பண்டிகைக்கு அகல் விளக்குகள் உட்பட பல்வேறு வகையான பொம்மைகள் 10 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், விலை சரிவடைந்தது, உற்பத்தியாளர்களை கவலையடைய வைத்துள்ளது.ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு பிறகு, மூலப்பொருட்களின் விலை அதிகரித்தது.உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலை சரிந்துள்ளது. செராமிக் தொழில் நலிவடைந்து வரும் நிலையில், அதன் விலை நாளுக்கு நாள் சரிந்து வருவது ஏமாற்றத்தை தருகிறது' என்றார்.

மூலக்கதை