மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? தீபாவளிக்குள் தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க தீவிரம்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? தீபாவளிக்குள் தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க தீவிரம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநில சட்டமன்றங்களின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த மாநிலங்களில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பணிகளை தீபாவளிக்குள் முடித்துவிட தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை நக்சல் ஆதிக்கம் உள்ள தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த பின்னர் அறிவிக்கப்படும். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மோடி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். அப்போது பேசிய பிரதமர், காஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்குவோம் என்று கூறினார். மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், சட்டப்பேரவை தேர்தலையொட்டி மூன்றாவது கட்டமாக மேற்கொண்ட ‘மகா ஜனாதேஷ்’ யாத்திரை நேற்று நாசிக் நகரில் நிறைவுற்றது. இதையொட்டி இங்குள்ள தபோவன் மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்துக்கு பாஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜ பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மூலக்கதை