இந்தியாவுக்கு சலுகை? டிரம்ப் சூசகம்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு சலுகை? டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: ஹூஸ்டன் கூட்டத்தில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.


ஐ.நா., சபையின், 74ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24ம் தேதி முதல், 30 வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு, நாளை(செப்.,21) புறப்பட்டு செல்கிறார். 22ம் தேதி, ஹூஸ்டனில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள, 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பும் பங்கேற்கிறார். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி 3 மணி நேரம் நடைபெறும்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹூஸ்டனில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில், இந்தியாவும் ஒன்று. ஹூஸ்டன் கூட்டத்தில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.


அடுத்தடுத்து சந்திப்பு:


கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த மாநாட்டில் டிரம்பை சந்தித்த மோடி, பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டிலும் சந்தித்து பேசினார். இந்நிலையில் ஹூஸ்டனில் 22ம் தேதி இருவரும் சந்திக்க உள்ளனர். தொடர்ந்து நியூயார்க்கில் ஐ.நா., சபை கூட்டத்திலும் சந்திக்க உள்ளனர்.

மூலக்கதை