எந்த கதையிலும் நடிக்க தயார்!

தினமலர்  தினமலர்
எந்த கதையிலும் நடிக்க தயார்!

தேசிய விருது பெற்ற நடிகை, ப்ரியா மணி, திருமணத்திற்கு பின்னும், தற்போது சினிமா மட்டுமல்லாது, 'தி பேமிலி மேன்' என்ற வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து:

தென் மாநில சினிமாவில், பெரிதாக உங்களை எதிர்பார்த்த நிலையில், திடீரென, 'வெப்சீரிஸ்' பக்கம் போனது ஏன்?

இதற்கும் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர்களை பொறுத்தவரை, எல்லாமே நடிப்பு தான். அதில் எந்த வேறுபாடும் இல்லை. சினிமா, வெப்சீரிஸ், நாடகம் என, எல்லாமே ஒன்று தான்.

'தி பேமிலி மேன்' சீரியல், எந்த மாதிரி கதைக்களம் உடையது?

'மிடில் கிளாஸில்' உள்ள அரசு அலுவலருக்கு, அவரது அலுவலகத்திலும், குடும்பத்திலும் ஏற்படுகிற சம்பவங்களே இத்தொடரின் கதை; இது, ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும்.

எந்த வேடத்தில் நடிக்கிறீர்கள்?

தென் மாநில பெண்ணாக, மனோஜ் பாஜ்பாய்க்கு மனைவியாக, சுசித்ரா என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன்.

நடிகையருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க, முயற்சிக்கவில்லையா?

தாராளமாக... அதுபோன்ற கதைகள் வந்தால் நடிப்பேன். அதற்கு தயாராக இருக்கிறேன்.

'டிஜிட்டல்' வரவு அதிகரித்துள்ளது குறித்து?

நிறைய, வெப் சீரிஸ்களும், அதற்கான தளங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதைப்பற்றி அனைவரும் அறிந்துள்ளனர். உலகம் முழுக்க, வரவேற்பும் கூடி வருகிறது. இதனால், சினிமாவுக்கு எந்த பாதிப்பும் வராது.

திரைத்துறையில் சில வாய்ப்புகளை தவற விட்டு விட்டோமே என, நினைத்ததுண்டா?

அந்த மாதிரி, எதையும் நான் இழக்கவில்லை.

நடிப்பு தவிர, தயாரிப்பு, இயக்கம் போன்ற பணிகளில் இறங்குவீர்களா?

நடிப்பு மட்டும் போதுமே! இயக்கம், தயாரிப்பு போன்ற எதிலும் ஈடுபடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

எந்த மாதிரி வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?

எந்த மொழியானாலும், எந்த மாதிரி படம் கிடைத்தாலும், நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும். சவாலான கேரக்டராக இருக்க வேண்டும்; அவ்வளவு தான்.

மூலக்கதை