உ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம்

தினமலர்  தினமலர்
உ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: ''உ.பி., மாநிலம் குறித்த கருத்து மாற்றப்பட்டு, அதன் அடையாளம் மீட்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


உ.பி., முதல்வராக, ஆதித்யநாத் யோகி பொறுப்பேற்று, 30 மாதங்கள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அனைவருக்கும் வீடு வசதி ஏற்படுத்தி தரும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, விவசாயிகளுக்கான, கிஷான் காப்பீடு, கழிப்பறை கட்டுதல், மருத்துவ காப்பீடு வழங்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி, உ.பி., மாநிலம் சாதனை படைத்துள்ளது.

உ.பி.,யில், 14 ஆண்டு இடைவெளிக்குப் பின், 2017, மார்ச் 19ல், மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், உ.பி., மாநிலம் தன் சொந்த அடையாளத்தை இழந்து, பின் தங்கியது. பா.ஜ., ஆட்சி அமைந்த பின், என் அரசில், உ.பி., மாநிலம் குறித்த தவறான கருத்துக்கள் மாற்றப்பட்டு, அதன் பழைய அடையாளம் மீட்கப்பட்டுள்ளது. இதுவே எங்கள் அரசின் மிகப்பெரிய சாதனை. மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை மேம்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளில், கலவரம் போன்ற எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. கொள்ளை, திருட்டு சம்பவங்கள், 54 சதவீதமும், பாலியல் பலாத்காரம், 36 சதவீதமும், ஆள் கடத்தல், 30 சதவீமும், மோதல் சம்பவங்கள், 38 சதவீமும் குறைந்துள்ளன.


இங்கிருந்த கிரிமினல் குற்றவாளிகளில் பலர், சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்; மற்றவர்கள் மாநிலத்தை விட்டு தப்பியோடிவிட்டனர். மாநிலத்தில், புதிதாக, 41 போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன், இங்கு, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை இருந்தது. எங்கள் ஆட்சியில், விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, அந்த நிலையை மாற்றியுள்ளோம். மாநிலம் முழுவதும், 86 லட்சம் விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் கொள்முதல், இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் நடந்த பெரும்பான்மையான மத நிகழ்ச்சிகளும் அமைதியாக முடிந்துள்ளன. உ.பி.,யை விட, பாதியளவே உள்ள சிறிய மாநிலங்களில் கூட, லோக்சபா தேர்தலின் போது, வன்முறைகள் நடந்தன. ஆனால், இங்கு, தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில், உ.பி., மாநிலம் பெரியளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம், இளைஞர்களுக்கு பதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 70 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் வகையில், உ.பி., மாநிலத்தில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். அப்போது, தன் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட சாதனைகள் குறித்த பட்டியலையும் ஆதித்யநாத் வெளியிட்டார்.

மூலக்கதை