வேலையில்லா இன்ஜினியர்கள் டி.வி.எஸ்., இலவச பயிற்சி

தினமலர்  தினமலர்
வேலையில்லா இன்ஜினியர்கள் டி.வி.எஸ்., இலவச பயிற்சி

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா, மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டதாரிகளுக்கு, ஆறு மாத திறன் மேம்பாட்டு பயிற்சியை, டி.வி.எஸ்., ஸ்ரீ சக்கரா நிறுவனம் வழங்குகிறது.

இது குறித்து, டி.வி.எஸ்., ஸ்ரீ சக்கரா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.வி.எஸ்., ஸ்ரீ சக்கரா நிறுவனம், சாஸ்த்ரா பல்கலையுடன் இணைந்து, திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளியை, 2016ல் துவங்கியது.இந்த ஆண்டில், 2018 – 2019ம் ஆண்டுகளில், பொறியியல் படிப்பு முடித்த, தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்காக, ஆறு மாத சான்றிதழ் வகுப்பு நடத்தப்பட உள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு, தகுந்த பயிற்சி அளித்து, அவர்களை வேலை பெற தகுதி உள்ளவர்களாக உருவாக்குவதே, இதன் நோக்கம்.இந்த வகுப்பில் சேர கட்டணம் கிடையாது. உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாத உதவித் தொகையாக, 1,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.ஆறு மாத பயிற்சிக்கு பின் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வகுப்பில் சேர, இளங்கலை பொறியியல் மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளில், குறைந்தபட்ச மதிப்பெண், 65 சதவீதம் பெற்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த வகுப்பில் சேர விரும்புவோருக்கு, அக்., 6ம் தேதி, நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

வகுப்பில் சேர விரும்புவோர், http://sas.sastra.edu/tvs19 என்ற இணைய பக்கத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களை, 04362 – -304100 எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை