துணை கவர்னர் பதவி 100 விண்ணப்பங்கள்

தினமலர்  தினமலர்
துணை கவர்னர் பதவி 100 விண்ணப்பங்கள்

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவிக்கு, 100 விண்ணப்பங்கள் நிதியமைச்சகத்துக்கு வந்துள்ளன.

ரிசர்வ் வங்கியில், துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா, தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, அப்பதவிக்கான புதிய நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் துவங்கின. தற்போது, இப்பதவிக்காக, 100 விண்ணப்பங்கள் நிதியமைச்சகத்துக்கு வந்துள்ளன.

இவை, தற்போது உயர்மட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இக்குழுவானது, அந்த பதவிக்கு பொருத்தமானவரை தேர்வு செய்து பரிந்துரைக்கும். அமைச்சரவை செயலர் தலைமையிலான, நிதித் துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடல் குழுவானது, ஒருவர் தகுதி அடிப்படையில் பொருத்தமான நபராக இருந்து, அவர் விண்ணப்பிக்காமல் இருந்திருந்தாலும் கூட, அவரை பரிந்துரைக்கலாம்.

மேலும், இந்த குழுவானது, அனுபவம், தகுதி உள்ளிட்டவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு கோலை தளர்த்திக் கொள்ளவும் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர், மூன்று ஆண்டு காலத்துக்கு பதவியில் அமர்த்தப்படுவார். இதன் பின், பணி நீட்டிப்புக்கும் வாய்ப்புகள் உண்டு.

மூலக்கதை