நேரடி வரி வசூல் வருவாய் குறைந்தது; ஜி.எஸ்.டி., வரி சலுகைகளை பாதிக்குமா?

தினமலர்  தினமலர்
நேரடி வரி வசூல் வருவாய் குறைந்தது; ஜி.எஸ்.டி., வரி சலுகைகளை பாதிக்குமா?

புதுடில்லி: நாட்டின் நேரடி வரி வசூல் குறைந்திருப்பதை அடுத்து, நாளை நடைபெறும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரிச் சலுகை அறிவிப்புகள் அதிகம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் குறைந்துவிட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்தரை மாதங்களில், நேரடி வரி வசூல் மூலமான வருவாயும் குறைந்துள்ளது. அரசின் வரி வருவாய் குறைந்து வரும் நிலையில், வரிச் சலுகைகளை வழங்குவது, அரசுக்கு மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

நிர்பந்தம்:
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், 1ம் தேதி முதல், செப்டம்பர், 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அரசின் நேரடி வரி வசூல், 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு, 4.4 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நேரடி வரி வருவாயை பொறுத்தவரை, பட்ஜெட் இலக்கு, 13.35 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்கு, இன்னும் ஆறரை மாத அவகாசமே உள்ளது.

பட்ஜெட் இலக்கின் படி பார்த்தால், அடுத்த ஆறரை மாத அவகாசத்தில், வரி வசூலை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர், 15 என்பது, நேரடி வரி வசூலுக்கான முக்கியமான ஒரு காலக்கெடு. ஏனெனில், அட்வான்ஸ் வரி கட்டுவதற்கான நான்கு தவணைக் காலத்தில், இது இரண்டாவதாகும். இக்காலகட்டத்தில், நிறுவனங்கள் தங்கள் வரி பொறுப்பில், 45 சதவீதத்தை செலுத்த வேண்டும். இதற்கடுத்து, இரண்டு தவணைகளாக, டிசம்பர் 15ல், 30 சதவீதத்தையும், மார்ச் 15ல், 25 சதவீதத்தையும் செலுத்த வேண்டும்.

இலக்கு:
அட்வான்ஸ் வரி வசூலை பொறுத்தவரை, செப்டம்பர் 15 வரை, 6 சதவீத, அதாவது, ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், 18 சதவீதமாக இருந்தது.இதே போல், கடந்த நிதியாண்டிலும், நேரடி வரி வசூல் இலக்கை எட்டவில்லை. 63 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது. கடந்த, 2018 – 19ம் ஆண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கு, முதலில், 11.5 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. பின், 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், வரி வசூல், 11.37 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது.

நடப்பு நிதியாண்டுக்கான வரி வசூல் இலக்கு, 13.35 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. முதலில், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 13.80 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, அதன்பிறகு, 45 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, 13.35 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

சந்தேகம்:
நேரடி வரிகள் வசூலில் காணப்படும் தன்மை, நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள தளர்ச்சியை காட்டுவதாகவே அமைந்துள்ளதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நேரடி வரி வசூலும் குறைந்துள்ள நிலையில், நாளை நடைபெறும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பெரிய அளவிலான சலுகை அறிவிப்புகள் இடம் பெறுமா என்பதும் சந்தேகமே என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், ஆறு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்து, 98 ஆயிரத்து, 902 கோடி ரூபாயாக உள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலை அதிகரிக்க முயற்சி நேரடி வரி வசூலை அதிகரிப்பதற்கான அடுத்தகட்ட முயற்சியில் அரசு இறங்கியுள்ளது என, மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் உறுப்பினர், அகிலேஷ் ரஞ்சன் கூறியுள்ளார். இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: நேரடி வரி வசூலுக்கான இலக்கு, 13.35 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கார்ப்பரேட் வரி, 7.66 லட்சம் கோடி ரூபாய், வருமான வரி, 5.69 லட்சம் கோடி ரூபாய் அடக்கம். வரி வசூல் வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது. வசூலை அதிகரிப்பது குறித்து, ஆணையம் புதிய முயற்சிகளையும், திட்டங்களையும் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை