இஸ்ரேல் தேர்தலில் திருப்பம்: கூட்டணி ஆட்சி அமைகிறது

தினமலர்  தினமலர்
இஸ்ரேல் தேர்தலில் திருப்பம்: கூட்டணி ஆட்சி அமைகிறது

ஜெருசலேம்: ''நெதன்யாகு கட்சியுடன் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைக்க தயார்; ஆனால், இஸ்ரேலின் அடுத்த பிரதமர் நான் தான்,'' என, பிரதான எதிர்க்கட்சியான, 'புளூ அண்ட் ஒயிட்' கூட்டணி தலைவர், பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.


மத்திய கிழக்கு நாடான, இஸ்ரேலில், ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின், லிகுட் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதையடுத்து, சமீபத்தில், மீண்டும் பொதுத் தேர்தல் நடந்தது.

இதில், நேற்று மாலை வரை, 97 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள, 120 தொகுதிகளில், பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி, 31 இடங்களிலும், புளூ அன்ட் ஒயிட் கூட்டணி, 33 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


ஆட்சி அமைப்பதற்கு, 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:வலதுசாரி கூட்டணி ஆட்சியை அமைக்க விரும்பினேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. மூன்றாவது தேர்தலை சந்திக்க, தயாராக இல்லை.எனவே, எதிர்க்கட்சி தலைவரான, பென்னி கான்ட்சுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை அமைக்க தயார்.இது தொடர்பாக, விரைவில் அவரை சந்தித்து பேசவும் தயாராக இருக்கிறேன். இந்த சந்திப்பு, எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


இதையடுத்து, பென்னி கான்ட்ஸ் கூறியதாவது:மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க, நாங்களும் தயாரில்லை. பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை அமைக்க தயார். ஆனால், எங்கள் கட்சி தான், ஆட்சியை வழி நடத்தும். நான் தான், இஸ்ரேலின் அடுத்த பிரதமர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை