பாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: கேமரூன் தகவல்

தினமலர்  தினமலர்
பாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: கேமரூன் தகவல்

லண்டன்: மும்பை தாக்குதல் போன்று இன்னொரு தாக்குதல் நடந்தால் பாக். மீது ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தன்னிடம் கூறியதாக 'பார் தி ரெக்கார்டு' என்ற புத்தகத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், பிரெக்ஸிட் விவகாரத்தில் 2016-ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று பெரும்பாலானோர் வாக்களித்த மறுநாளே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்..


இந்நிலையில் டேவிட் கேமரூன் 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, பிரதமராக தாம் இருந்த போது தனது சொந்த மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த நினைவுகளை 'பார் தி ரெக்கார்டு' என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில் மன்மோகன்சிங், மற்றும் பிரதமர் மோடி பற்றிய தனது அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.
புத்தகத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஒரு துறவி போன்றவர். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்த நேரத்தில் கொதித்து எழுந்து விடுவார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடந்தால் பாக்.மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என என்னிடம் ஆவேசமாக கூறினார்.
2013-ம் ஆண்டு நான் இந்தியாவுக்கு பயணம் செய்தேன். பொற்கோவிலுக்கு செல்லுமாறு இங்கிலாந்துவாழ் இந்திய நண்பர்கள் என்னிடம் வலியுறுத்தியதால் பொற்கோவிலுக்கு சென்றேன். பஞ்சாபில் 'ஜாலியன்வாலா பாக் படுகொலை வெட்கக்கேடானது' என்று பார்வையாளர் புத்தகத்தில் எனது கருத்தையும் பதிவு செய்து அதற்கு வருத்தமும் தெரிவித்தேன். இதன்மூலம், பதவியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் யாரும் அமிர்தசரஸ் சென்றது இல்லை, படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தது இல்லை என்ற குறையை போக்கினேன்.
அதுபோல், இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி, 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தார். வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கூட்டத்தில், இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் சுமார் 60 ஆயிரம்பேர் பங்கேற்றனர். அதில், மோடியுடன் நானும் கலந்து கொண்டேன். அப்போது மோடியை நான் கட்டிப்பிடித்தபோது, பலத்த கைதட்டல் எழுந்தது. என்றாவது ஒரு நாள் இங்கிலாந்து வாழ் இந்தியர் இங்கிலாந்து பிரதமராக வேண்டும் என்று நான் கூறியபோதும் நல்ல வரவேற்பு இருந்தது. இவ்வாறு டேவிட் கேமரூன் புத்தகத்தில் கூறியுள்ளார்.

மூலக்கதை