இது, 'பிட்டிங்' பாஸ்! வாகனங்களை அபகரிக்கும் புது டெக்னிக்

தினமலர்  தினமலர்
இது, பிட்டிங் பாஸ்! வாகனங்களை அபகரிக்கும் புது டெக்னிக்

கோவை:கோவையில் 'பிட்டிங்' எனும் பெயரில் வாகனங்களை அடகு பெற்று அபகரிப்பவர்கள் குறித்து, 'அலர்ட்' செய்துள்ளனர் போலீசார். உரிய ஆவணங்கள் இல்லாமல், ஒரு வாகனத்தின் உரிமையாளர் மற்றவருக்கு விற்பனை செய்வதோ, அடகு வைப்பதோ, சட்டத்துக்கு புறம்பானது என்று எச்சரித்துள்ளனர்.
கோவையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும், வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு, 'போலீஸ்-இ ஐ' ஆப் மூலம் உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.இது போன்று சிக்கும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, அபராத ரசீது கொண்டு செல்லும்போது தான், பல வாகனங்கள் 'பிட்டிங்' வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.அதென்ன பிட்டிங்?பொதுவாக அவசர பண தேவைக்கு நகை, வீட்டு பத்திரங்களை அடமானம் வைப்பதுபோல், வாகனங்களை எவ்வித ஆவணங்களும் இல்லாமல், அடகு வைத்து பணம் பெறுவதன் பெயர் தான் 'பிட்டிங்'. இந்த வகையில் வாகனங்களை, அடகு வைக்கும்போது, வாகனத்தின் மதிப்புக்கு ஏற்ப, உரிமையாளருக்கு பாதி பணம் கொடுக்கப்படும்.பகீர் நிபந்தனைஅந்த தொகையை, குறிப்பிட்ட ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்துக்குள் அவர்கள் கேட்கும் வட்டியுடன், திருப்பி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த வாகனத்தை, 'பிட்டிங்' எடுத்த நபர், யாருக்கு வேண்டுமென்றாலும் விற்று விடலாம். அல்லது வாகனத்தை உடைத்து கழிவுகளாக விற்பனை செய்து கொள்ளலாம்.
இதுதான் 'பிட்டிங்' தொழிலின் நிபந்தனை.இதுபோல் 'பிட்டிங்' வைத்து வாங்கும் வாகனங்களை, பெரும்பாலும் குறைந்த விலைக்கு வேறு ஒரு நபருக்கு, போலியாக ஆவணங்களை தயாரித்தும், ஆவணங்கள் இல்லாமலும் விற்பனை செய்கின்றனர். இந்த 'பிட்டிங்' வாகனங்கள் மூலம், பல்வேறு குற்ற செயல்களும் அரங்கேறி வருகின்றன.இது குறித்து, குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் கூறியதாவது:கோவையில் டிராவல்ஸ் ரக கார்கள், பைக்குகள் அதிகமாக 'பிட்டிங்' வைக்கப்பட்டு வருகின்றன. எட்டு முதல், 10 ரூபாய் வட்டி வரை பெறுகின்றனர். அதிக வட்டி செலுத்த முடியாமல், பலர் தங்கள் வாகனங்களை இழக்கின்றனர்.
இதுபோன்ற ஆவணங்கள் இல்லாத வாகனங்களை வாங்கும் நபர்கள், அதனை ஐ.டி., நிறுவன வாடகைக்கும், சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல், ஒரு வாகனத்தின் உரிமையாளர் மற்றவருக்கு விற்பனை செய்வதோ, அடகு வைப்பதோ, சட்டத்துக்கு புறம்பானது.
எவரிடமும் உரிய ஆவணங்கள் இல்லாமல், பழைய வாகனங்களை வாங்க கூடாது. திருட்டு வாகனம் என தெரிந்தும் வாங்குவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வாரம் பைக்குகளை திருடிய மற்றும் அதனை தெரிந்து வாங்கிய, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.பிட்டிங் வாகனங்கள் உலா வரும் பகுதிகள்கோவையில் 'பிட்டிங்' வாகனங்கள், அதிகம் வலம் வரும் இடங்கள் சில உள்ளன. அவற்றில் உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்துார், போத்தனுார் இடங்கள் இதில் குறிப்பிடப்படுபவை ஆகும். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து, தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை