உள்ளாட்சி 'பராக்' :அக்., 4ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு : இந்தாண்டுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பு

தினமலர்  தினமலர்
உள்ளாட்சி பராக் :அக்., 4ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு : இந்தாண்டுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பு

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் மும்முராக நடந்து வரும் நிலையில், அக்., 4ல், வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டுமென, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, டிச., அல்லது ஜன., மாதம், உள்ளாட்சி தேர்தல் நடத்திட, மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை துவக்கியுள்ளது.முதல் கட்டமாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலுக்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து, பட்டியல் தயாரிப்பு பணியை வேகமாக முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் பழனிசாமி, கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வாக்காளர் பட்டியலை, ஓட்டுச்சாவடி வரைபடத்துடன் வெளியிட வேண்டும். வரும், 30ம் தேதிக்குள், போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை, பதிவிறக்கம் செய்து, அக்., 1ம் தேதி அச்சகத்தில் ஒப்படைத்து, 3ம் தேதிக்குள், பட்டியலை அச்சடித்து பெற வேண்டும்.வரும், அக்., 4ல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அக்., 5ம் தேதி, அரசியல் கட்சிகளுக்கு, பட்டியலை வழங்கிட வேண்டும்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், வாக்காளர் பட்டியலை, மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். பட்டியலை சரிபார்த்து, தேவையெனில் திருத்தம் செய்யலாம்; பாகம், வார்டு மாறியிருந்தால், திருத்தம் செய்து துணை பட்டியலை வெளியிடலாம். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் முடியும் வரை, திருத்தம் செய்து, துணை பட்டியல் வெளியிடலாம்.உள்ளாட்சிகளுக்கான பட்டியல், தவறு இல்லாமல், கவனத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களோ, பட்டியல் தவறுகளுக்கு பொறுப்பாவார்கள்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை