'இ - சிகரெட்' தடை அரசாணை வெளியீடு

தினமலர்  தினமலர்
இ  சிகரெட் தடை அரசாணை வெளியீடு

புதுடில்லி: 'இ - சிகரெட்' தடைக்கான அவசர சட்டம் தொடர்பான அரசாணையை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. 'எலெக்ட்ரானிக்ஸ் சிகரெட்' எனப்படும், இ - சிகரெட் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிப்பதற்கான அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கான சட்ட மசோதா, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை, முதல் முறையாக மீறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.


தொடர்ந்து இந்த சட்டத்தை மீறினால், 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.இந்த சட்டத்தின் படி, இ - சிகரெட் தயாரிப்பது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, விற்பனை செய்வது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதுஆகியவை குற்றச் செயலாக கருதப்படும். இந்த அவசர சட்டத்துக்கான அரசாணையை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.இ - சிகரெட்டில், புகையிலைக்கு பதிலாக, நிகோடின் மற்றும் ரசாயன கலவை அடங்கிய திரவம் நிரப்பப்பட்டிருக்கும். இ - சிகரெட்டில் உள்ள பேட்டரியை செயல்பட வைத்ததும், அதிலிருந்து ஏற்படும் வெப்ப ஆற்றலின் உதவியால், திரவம் ஆவியாகி, அதை பயன்படுத்துவோருக்கு, புகை பிடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த, இ - சிகரெட்டில் உள்ள நிகோடினால், அவற்றை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக வந்த தகவல்களை அடுத்து, அதற்கு, மத்திய அரசு தடைவிதித்துள்ளது.


மூலக்கதை