தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்ப்பை உடைத்ததால் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்ப்பை உடைத்ததால் அதிர்ச்சி

மும்பை: இந்திய கேப்டன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான குணம் உடையவர்கள். களத்தில் வீரர்களையும், நெருக்கடி நிலையையும் தனக்கே உரித்தான பாணியில் அவர்கள் கையால்வார்கள். சவுரவ் கங்குலியை பொறுத்தவரை கொஞ்சம் ஆக்ரோஷமானவர். தோனியை பொறுத்தவரை கேப்டன் கூல் என்றே பெயர் எடுத்தவர். அந்த வரிசையில், களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் விராட் கோலியை கங்குலியின் வாரிசு என்றே சொல்லலாம். இருப்பினும், விராட் கோலி கொஞ்சம் கூடுதலாகவே ஆக்ரோஷம் கொண்டவராக உள்ளார்.விராட் கோலியின் குணம் என்னவென்றால், தன்னைப் போலவே ஒவ்வொரு வீரரரும் முழுமையாக அர்ப்பணிப்புடன், ஆற்றலுடன் இருக்க வேண்டும் என நினைப்பார். களத்தில் வீரர்கள் தவறு செய்வது இயல்புதான். ஆனால், சில நேரங்களில் சிறு தவறு கூட வெற்றி, தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும். அதனால், களத்தில் சிறு தவறுகள் நடந்தாலும் விராட் கோலி கோபத்தை வெளிக்காட்டிவிடுவார்.அந்த வகையில், நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியிலும் கோலியின் கோபம் வெளிப்பட்டது. மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 10வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தினை தென்னாப்ரிக்க வீரர் பவுமா சந்தித்தார். அவர் அடித்த பந்து ஸ்ரேயாஸ் நோக்கி சென்றது. ஸ்ரேயாஸ் மெதுவாக பந்தினை பிடித்து வீசியதால் இரண்டாவது ரன் ஓடினார் பவுமா. அத்துடன், ஸ்ரேயாஸ் வீசிய பந்தினை பந்துவீச்சாளர் பக்கம் இருந்த ஸ்டம் பின்புறம் பிடிக்க யாரும் இல்லை. அதனால், மூன்றாவது ரன் ஓடப்பட்டது.தேவையில்லாமல் இரண்டு ரன்கள் கூடுதலாக ஓடப்பட்டதால் கேப்டன் விராட் கோலி டென்ஷன் ஆகிவிட்டார். மூன்றாவது ரன் ஓடும் போது ஸ்டம் அருகே சென்று பந்தினை பிடித்த அவர், ஸ்டம் மீது வேகமாக அடித்தார். அதில், ஸ்டம் தெறித்து கீழே வீழ்ந்தது. ஸ்டம்பில் லேசாக உடைப்பும் ஏற்பட்டது. விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்பை அடிக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

மூலக்கதை