டி20 போட்டிகளில் அதிக ரன்கள்: விராட் கோஹ்லி உலக சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டி20 போட்டிகளில் அதிக ரன்கள்: விராட் கோஹ்லி உலக சாதனை

மொகாலி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று மொகாலியில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஆட்டமிழக்காமல் 72 ரன்களை குவித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கோஹ்லி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இப்போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்திய-தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி நேற்று மொகாலியில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் ஓபனர் ஹெண்ட்ரிக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குவின்டான் டிகாக் மற்றும் டெம்பா பவுமா அபாரமாக ஆடினர்.

குவின்டன் டி காக் 37 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். பவுமா 49 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும் இந்திய அணியின் பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்துகளை வீசினர். இதனால் தென்னாப்பிரிக்க அணியை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் தீபக் சாஹர் 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றிக்கு தேவை 150 ரன்கள் என்ற நிலையில் ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் ஓபனர்களாக இறங்கினர்.

ரோஹித் ஷர்மா 12 ரன்களில் பெஹலுக்வாயோவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். அதன் பின்னர் தவானும், கேப்டன் விராட் கோஹ்லியும் பொறுப்பாக ஆடினர்.

தவான் 40 ரன்களும் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 72 ரன்களும் (52 பந்துகள், 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுக்க இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்றது. இத்தொடரின் 3வது டி20 போட்டி வரும் 22ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.

கடந்த 15ம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்த இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்தானது. இப்போட்டியில் 72 ரன்களை விளாசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

71 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர், தற்போது 2,441 ரன்கள் (சராசரி 50. 85, 22 அரை சதங்கள்) எடுத்து, ஏற்கனவே பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோஹித் ஷர்மாவை முந்தியுள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸி.

அணிக்கு எதிராக அடிலெய்டில் கோஹ்லி 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். இதுவே டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அவரது அதிகபட்ச ரன்.

97 போட்டிகளில் 2,434 ரன்கள் என ரோஹித் ஷர்மா தற்போது 2ம் இடத்தில் உள்ளார். 3ம் இடத்தில் நியூசி.

வீரர் மார்ட்டின் கப்டில் (78 போட்டிகளில் 2,283 ரன்கள்) 4ம் இடத்தில் பாக். வீரர் சோயப் மாலிக் (111 போட்டிகளில் 2,263 ரன்கள்) 5ம் இடத்தில் நியூசி.

வீரர் பிரெண்டன் மேக்குலம் (71 போட்டிகளில் 2,140 ரன்கள்) உள்ளனர்.

.

மூலக்கதை