வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு

தினமலர்  தினமலர்
வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு

சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், பக்தர்கள் வழங்கும் கொலு பொம்மைகளை கொண்டு, நவராத்திரி கொலு விமரிசையாக நடைபெற உள்ளது.


வடபழனி ஆண்டவர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி:வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி திருவிழாவை சிறப்பாக நடத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, செப்., 29ல் துவங்கி அக்., 8 வரை, நவராத்தரி கொலு, கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. பக்தர்கள் அளிக்கும், கொலு பொம்மைகளை கொண்டு, இந்த கொலு நடத்தப்பட உள்ளது.


இதுநாள் வரை, வீட்டினுள் வைத்து, தாங்கள் மட்டுமே பார்த்து வந்த கொலு பொம்மைகளை, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து மகிழும் வகையில், பக்தர்கள் கொலு பொம்மைகளை அளிக்கலாம். ஓரளவிற்கு மேல், கொலு பொம்மைகளை வைக்க முடியாது என்பதால், பக்தர்கள் தாமதமின்றி, கொலு பொம்மைகளை, கோவில் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். பக்தர்கள் அளிக்கும் கொலு பொம்மைகள், பல ஆண்டுகளுக்கு, கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளதால், அந்த பொம்மைகள், திருப்பி அளிக்கப்படாது.


கொலு நடப்பதை முன்னிட்டு, ஒன்பது நாட்களும், பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு நடைபெற உள்ளது. மேலும், ஒரு நாள் லட்சார்ச்சனையும், சரஸ்வதி பூஜையன்று, பள்ளி செல்ல உள்ள குழந்தைகளுக்காக, வித்யாரம்பம் வழிபாடும், கோலாகலமாக நடைபெற உள்ளது. நவராத்திரி நடைபெறும், 10 நாட்களிலும், அம்பாளுக்கு, 10 விதமான அலங்காரம் செய்யப்படும். இந்த, சக்தி கொலு நடைபெறும் நாட்களில், பக்தி சொற்பொழிவும் நடைபெறும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை