இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: நாசா தகவல்

தினகரன்  தினகரன்
இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: நாசா தகவல்

வாஷிங்டன்: இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கலனை கடந்த 7ம் தேதி நிலவில் தரை இறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நிலவின்  மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போது விக்ரம் லேண்டர் கலனில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், விஞ்ஞானிகளுக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை திட்டமிட்டபடி தரை இறக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. விக்ரம் லேண்டர் கலன் திடீரென மாயமானதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், நிலவின் மேற்பரப்பில் அது எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் லேண்டரை படம் பிடித்த இஸ்ரோ அதை தொடர்பு கொள்ள நாசாவின் உதவியை நாடியிருந்தது. இதனையடுத்து நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசாவும் களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் நாசா 2009-ம் ஆண்டு அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து செல்லும் போது விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்படும் எனவும் நாசா தெரிவித்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சவின் எல்.ஆர்.ஓ. என்ற செயற்கைக்கோளால் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா கூறியுள்ளது.

மூலக்கதை