டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வினேஷ் போகத் தகுதி

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வினேஷ் போகத் தகுதி

நூர் சுல்தான்: டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டித் தொடரில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை வினேஷ் போகத்துக்கு கிடைத்துள்ளது.கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 53 கிலோ எடைபிரிவு ‘ரெபசேஜ்’ சுற்றில் (மறு வாய்ப்பு) தொடர்ச்சியாக 2 வெற்றிகளைக் குவித்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (25 வயது) ஒலிம்பிக்  போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.ரெபசேஜ் பிரிவில் அவர் தனது முதல் போட்டியில் உக்ரைனின் யூலியா கல்வாட்ஸியை 5-0 என்ற கணக்கிலும், 2வது போட்டியில் சாரா ஹில்டெப்ரான்டை 8-2 என்ற கணக்கிலும் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆப் சுற்றுக்கு  முன்னேறினார். முன்னதாக, பிரதான சுற்றின் முதல் போட்டியில் சோபியா மேட்சனை (ஸ்வீடன்) 13-0 என வீழ்த்திய வினேஷ், அடுத்த போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மயூ முகைடாவிடம் (ஜப்பான்) 0-7 என தோல்வியைத் தழுவினார்.எனினும், மயூ முகைடா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் வினேஷ் போகத்துக்கு ‘ரெபசேஜ்’ வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.பூஜா அசத்தல்: இதே தொடரின் மகளிர் 59 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை பூஜா தண்டா அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். அவர் கால் இறுதியில் ஆசிய சாம்பியன் இனகாகியை 11-8 என்ற புள்ளிக் கணக்கில்  போராடி வென்றார்.

மூலக்கதை