காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு 18 மாதம் சிறை?.. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு 18 மாதம் சிறை?.. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: ‘தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் அரசியல்வாதிகள், 18 மாதங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்’ என்று, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆக.

5ம் தேதி மத்திய அரசு நீக்கி, 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை தொடர்ந்து,  காஷ்மீரின் பல கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுடன் ‘காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில், பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த, ஆட்கொணர்வு மனுவிற்கு வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வீட்டுச்சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, அவரது மகனான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களை விடுவிப்பது ெதாடர்பாக, மத்திய அரசின் தரப்பில் எவ்வித உத்தரவாதமும் தரப்படாததால், ‘அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்’ என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், உதம்பூர் எம்பியும், பிரதமர் அலுவலக இணையமைச்சருமான (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங், கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் ேபசியதாவது: 370வது பிரிவை ரத்து செய்வதற்கு முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் சில அரசியல்வாதிகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்கள் 18 மாதங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்.

அரசியல்வாதிகளை விடுவிப்பது குறித்து ஊடகங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றன. அதனால், காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் 18 மாதங்களுக்கும் முன்னதாக விடுவிக்கப்படுவர்.

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை வருவதற்கு 72 ஆண்டுகள் ஆகாது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கருத்துபடி பார்த்தால், தடுப்பு காவலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவாக காவலில் வைக்கப்படுவது உறுதி என்பதை மறைமுகமாக கூறியுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை