தன்னை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: அம்பத்தூரில் சோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தன்னை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: அம்பத்தூரில் சோகம்

அம்பத்தூர்: சொந்த ஊரில் ஒருவருடன் ஏற்பட்ட நட்பை தவறாக பேசி, அவரது புகைப்படத்தை அசிங்கமாக சித்தரித்து அனுப்பியதால், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவன், மனைவியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் அருகே சூரப்பட்டு, பாரதிதாசன் நகர் 18-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் காயத்ரி (17).

இவர்களது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, குலவன் குடியிருப்பு கிராமமாகும். இவர் கொரட்டூர், மாதனாங்குப்பத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவுக்கு காயத்ரி பெற்றோருடன் கிளம்பி சென்றார். அப்போது அங்கு வசிக்கும் ஈசன் (40) என்பவருடன் காயத்ரிக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

காயத்ரியின் செல்போன் நம்பரை ஈசன் தனது போனில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் காயத்ரி சென்னை திரும்பியதும், அவருடன் பலமுறை ஈசன் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதை ஈசனின் மனைவி பவித்ரா (36) தவறாக புரிந்து கொண்டு, தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2-ம் தேதி மாணவி காயத்ரியை பவித்ரா தொடர்பு கொண்டு அவதூறாக பேசியுள்ளார். மேலும், காயத்ரியின் புகைப்படத்தை அசிங்கமாக சித்தரித்து, அவருக்கு பவித்ரா அனுப்பி வைத்துள்ளார்.

இதில் காயத்ரி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அறைக்குள் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி காயத்ரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரை பெற்றோர் காப்பாற்றி, அம்பத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்று, பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காயத்ரி மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காயத்ரி பரிதாபமாக பலியானார்.

இப்புகாரின்பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக ஈசன், அவரது மனைவி பவித்ராவை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர்.

நட்பை தவறாக பேசி, அவரது புகைப்படத்தை சம்பந்தப்பட்டவரின் மனைவி அசிங்கமாக சித்தரித்து அனுப்பியதால் கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை