கூட்டம் சேர்ப்பதற்காக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் அரசு முகாம்களுக்கு அழைத்து வரப்படும் அவலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூட்டம் சேர்ப்பதற்காக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் அரசு முகாம்களுக்கு அழைத்து வரப்படும் அவலம்

திருவள்ளூர்: மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, கடந்த 2005ல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தியது. அப்போது, இத்திட்டத்தின்கீழ் நிதியாண்டில், 100 நாட்களுக்கு கட்டாய சிறப்பு திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது, சம்பளம் அதிகரிப்பு உட்பட பல்வேறு மாற்றங்கள் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. கிராமங்களில், நீர் நிலைகளை தூர்வாருதல், மரம் வளர்ப்பு, தனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டுமான பணிகள், பண்ணை குட்டை அமைத்தல் உட்பட பல்வேறு பணிகளில், வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஊராட்சிகளின் சார்பில் திட்ட பணிகளுக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், நிதி பெறப்பட்டு, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதில், பல கிராமங்களில் பணியாளர்கள் பெயரளவுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்படுவதாக புகார் உள்ளது.

இவ்வாறு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்து, சாதகமாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், அரசு அதிகாரிகள், புதிதாக மற்றொரு நடைமுறையை அறிமுகப்படுத்தி, வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த சர்ச்சையை அதிகரிக்கின்றனர். ஊராட்சிகளில், அரசின் மனுநீதிநாள் முகாம், ‘அம்மா’ திட்ட முகாம், கிராம சபை கூட்டம் உட்பட ஆளுங்கட்சி அமைச்சர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கும் அரசு விழாக்களில் போதுமான கூட்டம் சேர்வதில்லை.

இதனால், தங்கள் பலத்தை நிரூபிக்க, பணியிடத்தில் இருக்கும் வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை அழைத்து செல்வதை ஒன்றிய அதிகாரிகளும் தற்போது பின்பற்ற துவங்கியுள்ளனர்.
விழா துவங்கும் முன்பே, பணியிடத்திலிருந்து, பணியாளர்கள் அழைத்து வரப்படுவதுடன், பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு, செலவில்லாமல் கூட்டம் சேர்க்க, அதிகாரிகள் திட்டமிட்டாலும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் வீணாகிறது.

ஏற்கனவே, பயனில்லாத திட்டங்களை செயல்படுத்தி, பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாக புகார் உள்ள நிலையில், அரசு விழாக்களில் கூட்டம் சேர்க்க வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை அழைத்து வருவதை அதிகாரிகள் கைவிடுவது திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பதை தவிர்க்கும்.

.

மூலக்கதை