இந்தி திணிப்பை கண்டித்து மாவோயிஸ்ட்கள் கோஷம்: ஈரோடு கோர்ட்டில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தி திணிப்பை கண்டித்து மாவோயிஸ்ட்கள் கோஷம்: ஈரோடு கோர்ட்டில் பரபரப்பு

ஈரோடு: இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கையை கண்டித்து மாவோயிஸ்ட்கள் கோஷமிட்டதால் ஈரோடு கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, கடத்தூர், கோபி மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணம் கொடுத்து சிம்கார்டுகளை பெற்று முறைகேடு செய்ததாக மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், கண்ணன் மற்றும் வீரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்களில் கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை சிறையிலும், ரூபேஷ் திருச்சூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணைக்காக ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்திற்கு மாவோயிஸ்ட்கள் 3 பேரும் நேற்று அழைத்து வரப்பட்டனர். ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து அன்று மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது, மாவோயிஸ்ட்கள் 3 பேரும் மத்திய அரசின் இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திடீரென கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை