அதிராம்பட்டினத்தில் 2ம் நாளாக சிலைகள் தேடும் பணி துவக்கம்: ஐம்பொன் நடராஜர் சிலை, பீடம் கண்டெடுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிராம்பட்டினத்தில் 2ம் நாளாக சிலைகள் தேடும் பணி துவக்கம்: ஐம்பொன் நடராஜர் சிலை, பீடம் கண்டெடுப்பு

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். ஒரத்தநாடு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் வள்ளிகொல்லைக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று வீட்டின் பின்புறம் காம்பவுன்ட் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது 5 அடி ஆழத்தில் பழங்கால ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

ஐந்தரை அடி எடை கொண்டது. எடை சுமார் 500 கிலோவுக்கு மேல் இருக்கும் இதுபற்றி தாசில்தார் மற்றும் ஆர்டிஓவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், ஆர்ஐ ரவிச்சந்திரன், சிவன் கோவில் நிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.   பின்னர் அந்த சிலைக்கு மாலை அணிவித்து மக்கள் வழிபட்டனர். இந்த சிலை பல லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த பகுதியில் மேலும் சிலைகள் இருக்கும் தடயங்கள் காணப்பட்டதால் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் சக்தி வாய்ந்த மின்விளக்கு பொருத்தப்பட்டு சிலைகள் மேலும் கிடைக்குமா என அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மாலையில் ஒரு பீடம் கிடைத்தது. அதுவும் ஐம்பொன்னாலானது.

எடை 50 கிலோ இருக்கும். தொடர்ந்து சிலையை தேடும் பணி நடந்தது.

அப்போது கனமழை கொட்டியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று 2ம் நாளாக சிலைகள் தேடும் பணி நடக்கிறது.

கடந்த ஓராண்டுக்கு முன் அதிராம்பட்டினம் பழஞ்சூர் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிராம்பட்டினம் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சண்முகம் கூறுகையில், இப்பகுதியை சுற்றி அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள் கிடைத்து வருகிறது. அதிவீரராமபாண்டியன் கோட்டை இப்பகுதியில் இருந்ததால் அதிகளவில் ஐம்பொன் சிலைகள் கிடைக்கக்கூடும்.

எனவே இப்பகுதியை அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டும்’’ என்றார்.

சுந்தரேஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரத்தில் பழமைவாய்ந்த கோமாளாம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் கோயிலில் 22 ஐம்பொன் சுவாமி சிலைகள் உள்ளன. சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் முப்பாட்டனார் அருஞ்சிதை சோழன் ஆட்சி காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டு மறவனேஸ்வரத்து பெருமாள் கோயில் என பெயர் சூட்டப்பட்டது.

பின்னர் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு கோமளாம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அடையாளமாக அவர்களின் சின்னம் மீன் பதிக்கப்பட்டுள்ளது, ஆனால் சுவாமி சிலைகள் இருந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.


.

மூலக்கதை