சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்: 1000அடி மலை உச்சியில் இருந்து குதித்த காதல் ஜோடி படுகாயம்... போளூரில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்: 1000அடி மலை உச்சியில் இருந்து குதித்த காதல் ஜோடி படுகாயம்... போளூரில் பரபரப்பு

போளூர்: போளூரில் ஆயிரம் அடி உயர மலையில் விடிய, விடிய தங்கிய காதல் ஜோடி, போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து குதித்தனர். இதில் காயம் அடைந்த   அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவன். இவர் திருவண்ணாமலை அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.மாணவன் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது, சிறுமியுடன் நட்பு ஏற்பட்டு இதன்காரணமாக  கடந்த 2 ஆண்டுகளாக காலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்ததாக தெரிகிறது.

இதனால் வேதனை அடைந்த காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறி, போளூரில் உள்ள சம்பத்கிரி மலைமீது ஏறியுள்ளனர். அன்றிரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ளனர்.

இதுபற்றி தெரியவந்ததும் அப்பகுதி மக்கள், போளூர்  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் வந்தனர்.

அவர்களுடன் அப்பகுதி இளைஞர்களும் மலைமீது ஏறினர்.

இவர்களை பார்த்ததும் காதல்ஜோடி சுமார் 1000 அடி உயர மலை உச்சியில் ஏறி கை கோர்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் மற்றும் பொதுமக்கள் மலை மீது ஏறி வருவதை பார்த்ததும் காதல் ஜோடி திடீரென மலை உச்சியில் இருந்து கீழே குதித்தனர். இதில் மாணவன் சிலஅடி தூரத்தில் உள்ள பாறை மீது தலைகுப்புற விழுந்து பாறைமீது செடி கொடிகள் நிறைய இருந்ததால் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
சிறுமியும் அருகே உள்ள பாறை மீது குதித்து காயம் அடைந்தார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு பாறை உருண்டதால் சிறுமி மலையில் சறுக்கியபடி சென்றார்.

அப்போது மலைமீது ஏறிய போலீசார் மற்றும் இளைஞர்கள், சிறுமியின் காலை பிடித்து மேலே இழுத்து அவரை காப்பாற்றினர்.

மாணவனையும் போளூர் தீயணைப்பு துறையினர் மீட்டனர். உடனடியாக  இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை