கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விஜயதசமியை முன்னிட்டு புதிதாக இந்த ஆண்டு சென்னை முதல் குலசேகரப்பட்டினம் வரை சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சுற்றுலா வரும் விஜயதசமி அன்று இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு (திருவல்லிக்கேணி, காவல் நிலையம் அருகில்) 2வது நாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைந்து காலை உணவு வழங்கப்படும். பிறகு 10 மணிக்கு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்றடைந்து, சூரசம்ஹராம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில்  மாலை 5 மணிக்கு தரிசனம் முடித்துக் கொண்டு, திருச்செந்தூரிலிருந்து 5. 50 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை வந்தடையும்.

மூன்றாவது நாள் காலை 9. 30 மணிக்கு புறப்பட்டு அழகர் கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருமலை நாயக்கர் மஹால் (ஒளி ஒலி காட்சி) சென்றடையும்.   இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த சுற்றுலாவிற்கு ₹5,400 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோன்று, ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு சென்னையிலிருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவிற்கு ரூ975 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு சுற்றுலாவிற்கும் குளிர் சாதன பேருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை